Islamic Widget

April 18, 2012

சவூதி: இருநாள் வார விடுமுறை கட்டாயம்?

சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகத் திட்டத்தின் படி, அனைத்து ஊழியருக்கும் (அரசுத்துறை, தனியார்) இரு நாள்கள் வார விடுமுறை வழங்கப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது.

அமைச்சகத்தின் இத்திட்டம்  பல்லாயிரக்கணக்கான தனியார் துறை ஊழியர்களை மகிழ்ச்சியுறச் செய்துள்ளது.தற்சமயம் சவூதி அரசு அலுவலகங்கள் வியாழன் வெள்ளி இருநாள்கள் வார விடுப்பு அளிக்கும் நிலையில்,  பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் வெள்ளி மட்டுமே வார விடுமுறை அளிக்கின்றன.
 சவூதியில் மண்ணில் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நேஷனலிசேஷன் (அ) சவூதிசேஷன் எனப்படும் உள்நாட்டுமயமாக்கல் திட்டப்படி தனியார் நிறுவனங்கள் சவூதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன்வந்த போதும், ஒப்பீட்டளவில் அரசுத்துறை சார் பணிகளையே சவூதி இளைஞர்கள் விரும்புகின்றனர். அதன் காரணிகளாக, தனியார் துறையின் அதிக வேலை நாள்கள் உள்ளிட்ட அம்சங்கள் இருந்துவந்தன. இந்நிலையில், வார விடுப்புகளைப் பொருத்த வரை, அரசுத் துறையை பின்பற்றி தனியார் நிறுவனங்களும் இருநாள்கள் வார விடுமுறை அளிக்கும்படி பணிக்கப்பட்டால், சவூதி இளைஞர்கள் தனியார் நிறுவனங்களையும் விரும்ப வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில் பொதுவாக சவூதியின்  வார இறுதிகளாக வியாழன் வெள்ளி அமைவதை வெள்ளி, சனி என்று மாற்றி அமைப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.
பிரசித்திப் பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றின் மேலாளர் மார்க் எல்.பொகோக் கூறுகையில், இருநாள் வார விடுமுறை மிகவும் வரவேற்கத்தக்கது; ஊழியர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது என்றார். மேலும், "உலகெங்கும் சனி, ஞாயிறு வார இறுதிகளாக அமைகையில் சவூதியில் வியாழன், வெள்ளி என்று அமைவது பொருந்தவில்லை; வேலையளவில் உலகத்தோடு ஒட்ட மூன்று நாள்களே கிடைக்கின்றன" என்று ஆதங்கம் தெரிவித்தார்.
தலால் அல் ஹாதி என்னும் சவூதி இளைஞர் கூறுகையில் "குடும்பத்தோடு செலவிட ஒரு நாள் வாரவிடுப்பு நிச்சயம் போதாமையாகவே இருக்கிறது. அந்த ஒரு நாளிலும் அடுத்தடுத்த நாள்களில் தொடர உள்ள பணியழுத்தம் குறித்தே சிந்திக்க வேண்டியதாகிறது. எனவே, இருநாள் வார விடுப்பை நான் மிகவும் வரவேற்கிறேன்.தாமதமின்றி இதை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றார்

No comments:

Post a Comment