ரூ.21 கோடி செலவில் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வயலூர் ரெயில்வே கேட் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு அருகே விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் வயலூர் ரெயில்வே கேட் அமைந்துள்ளது.
இந்த ரெயில்வே கேட்டை கடந்து தினமும் 50க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகிறது. இதனால் அவ்வப்போது ரெயில்வே கேட் மூடப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அங்கு புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை திட்டங்கள் சார்பில் ரூ.21 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பின்னர் இப்பணிகள் செய்ய சென்னையை சேர்ந்த பாரத் என்ஜீனியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி என்ற ஒப்பந்ததாரருக்கு டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 28-02-2011 அன்று தொடங்கப்பட்டது. இதில் 3/4 கிலோ மீட்டர் தூரத்தில் ரெயில்வே மேம்பாலமும், 26 தூண்கள் கொண்டும் வடிவமைக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக பணி தொடங்கி சுமார் 3 மாதம் அப்பகுதி மண்ணின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, தூண்கள் அமைக்கும் முறைகள் பற்றி ஆய்வு நடந்தது. பின்னர், சுமார் 6 மாதமாக கிடப்பில் போடப்பட்ட இப்பணிகள் திடீரென கடந்த 5 மாதங்களாக மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது சாலையோரங்களிலும், பாலங்கள் அமைக்கப்பட உள்ள இடங்களிலும் தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதனால் தற்காலிகமாக மாற்று பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுபாதை மாற்றியமைத்தாலும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வண்ணம் பிரதிபலிப்பானுடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிடில், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் முடிய ஒப்பந்தப்படி வருகிற 27.02.2013 கடைசி நாளாகும். ஆனால், இப்பணிகளை அதற்கு முன்பாகவே முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை காலத்தை பயன்படுத்தி பணிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முடுக்கிவிட்டு அதிகபட்ச பணிகளை செய்ய வேண்டும். ஏனெனில், தற்போது பணிகள் மந்தம் ஏற்பட்டால் வரும் மழைகாலங்களில் எவ்வித பணிகளும் செய்ய முடியாது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment