கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின்னர் நடந்த கலவரம் பரவுவதற்கு மோடி அரசின் மவுனமும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசின் மெத்தனமுமே காரணம் என குஜராத் உயர் நீதிமன்றம் மோடி அரசின்மீது குற்றம்சாட்டியுள்ளது.2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனக்கலவரத்தில் சுமார் 1500 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர்.
மேலும் பல கோடிக்கணக்கானரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சூறையாடப்பட்டன.
மேலும் பல கோடிக்கணக்கானரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சூறையாடப்பட்டன.
இக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வியாபார ஸ்தாபனங்களைச் சரி செய்ய அரசு உதவி செய்வதாக வாக்களித்திருந்தது. ஆனால், கலவரத்தில் பாதிக்கப்பட்ட மசூதிகள் முதலான மத ஸ்தாபனங்களைப் புனர் நிர்மாணிக்க உதவ மறுத்து விட்டது.
இதற்கு எதிராக, கலவரத்தில் பாதிக்கப்பட்ட மத ஸ்தாபனங்களைப் புனர் நிர்மாணிக்க மாநில அரசு உதவி வழங்கவேண்டுமெனக்கோரி, குஜராத் இஸ்லாமிய சேவைக்குழு என்ற அமைப்பு குஜராத் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தது.
இம்மனுமீதான தீர்ப்பைக் குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கும்போது, கலவரத்தைக் கட்டுப்படுத்துவதில் குஜராத் மோடி அரசு மெத்தனமாக நடந்து கொண்டதாகவும் அரசின் மவுனம் கலவரம் பரவுவதற்குக் காரணமாக அமைந்தது எனவும் கடுமையாக விமர்சனம் செய்தது.
இவ்வழக்கில், "மத ஸ்தாபனங்களுக்கு இழப்பீடு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது" என குஜராத் மாநில அரசு வாதிட்டது.
இதனை ஏற்றுக்கொள்ளாத ஆக்டிங் முதன்மை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சாரியா மற்றும் நீதிபதி பர்திவாலா அடங்கிய குழு, கலவரத்தில் மத ஸ்தாபனங்கள் அதிகமாக குறிவைத்து அழிக்கப்பட்டதாகவும் அவ்வாறு அழிக்கப்பட்ட 600 க்கு மேற்பட்ட மத ஸ்பானங்களை மீண்டும் புனர் நிர்மாணிப்பதற்கான நிதியினை மாநில அரசு அளிக்க வேண்டுமென தீர்ப்பளித்ததோடு, கலவரத்தில் பாதிக்கப்பட்ட மத ஸ்தாபனங்களைப் புனர் நிர்மாணிக்க உதவவேண்டியது அரசின் கடமை என்றும் கூறினர்.
மேலும், "நஷ்டஈடு தொடர்பான வழக்குகளில் மாநிலத்திலுள்ள 26 மாவட்டங்களின் மாவட்ட நீதிபதிகள் தீர்மானம் எடுக்க வேண்டும். தீர்மானத்தை 6 மாதங்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதிகள் சமர்ப்பிக்க வேண்டும்" எனவும் உத்தரவிட்டனர்.
கலவரத்தில் பாதிக்கப்பட்ட மத ஸ்தாபனங்களுக்கும் மாநில அரசு நிதி உதவி வழங்கவேண்டுமென தேசிய மனித உரிமை கழகமும் முன்னர் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
"அழிக்கப்பட்ட மத ஸ்தாபனங்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, நாட்டின் நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்" என குஜராத் இஸ்லாமிய சேவை குழு சார்பாக வாதாடிய வழக்குரைஞர் எம்.டி.எம் ஹக்கீம் கூறினார்.
மேலும், "2002 ல் நடந்த இன அழிப்புக்கு மாநில அரசின் மவுனமும் மெத்தனமுமே காரணம் என ஒரு நீதிமன்றம் குற்றம்சாட்டுவது இதுவே முதல்முறை" என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment