Islamic Widget

April 16, 2011

8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 81.3 சதவீத வாக்குகள் பதிவானது.

தமிழகத்தில் கடந்த 13ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது சில வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு மற்றும் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டு எந்திரங்கள் உடைக்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி அனந்தமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி 121வது வாக்குச்சாவடி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி ஆரணி நகர செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி, தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதி சங்கராபுரம் வாக்குச்சாவடி ஆகிய வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் சட்டமன்ற தொகுதியில் வளியவட்டம், பருத்திக்குடி வாக்குச்சாவடியில் ஏராளமான வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்ததால் அங்கு மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் சம்மட்டிக்குப்பத்தில் 2 வாக்குச்சாடிகளில் வன்முறை காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சேதமடைந்ததால் அங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. சங்கரன்கோவில் புளியம்பட்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி 2ல் ஒரு கட்சியைச் சேர்ந்த முகவர் வாக்காளர்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் அருகே அழைத்து சென்று அவர்களை வாக்களிக்க வைத்துள்ளார். இது தேர்தல் ஆணையம் சார்பில் பதிவு செய்யப்பட்ட வீடியோவில் பதிவானதைத் தொடர்ந்து அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.மறுவாக்குப்பதிவில் தமிழகம் முழுவதும் 81.3 சதவீத வாக்குகள் பதிவாயின. குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி அனந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி 121 வது மையத்தில் 1136 வாக்காளர்களில் 798 பேர் வாக்களித்தனர். இதில் ஆண்கள் 340, பெண்கள் 458. மொத்தம் 70.20 சதவீத வாக்குகள் பதிவாயின. நெல்லை மாவட்டம் புளியம்பட்டியில் 89 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்குப்பதிவைத் தொடர்ந்து வாக்காளர்களின் இடது கை நடுவிரலில் அடையாள மை இடப்பட்டிருந்தது. 8 வாக்குச்சாவடி மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் சுமார் 200 முதல் 300 வரை காவலர்களும், சிஆர்பிஎப் காவலர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

No comments:

Post a Comment