Islamic Widget

January 14, 2011

கடலூர் மாவட்டத்தில் சுனாமிக்கு பின் ரூ.5.12 கோடியில் அடிப்படை வசதிகள்

கடலூர் : ""கடலூர் மாவட்டத்தில் சுனாமிக்கு பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 5.12 கோடி ரூபாய் செலவில் 131 அடிப்படை வசதிகள் நடந்து வருகிறது'' என மகளிர் திட்ட அலுவலர் வெங்கடாசலம் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண் வளர்ச்சி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் கருத்துப்பட்டறை கடலூரில் நடந்தது. கடலோர ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஊராட்சிகள் அளவிலான மகளிர் கூட்டமைப்பு தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நிலைத்த வாழ்வாதாரத் திட்ட செயல் இயக்குனர் கார்த்திகேயன், நபார்டு உதவி பொது மேலாளர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இத்திட்டத்தில் 85 ஆயிரம் பேர் பயன் பெறுகின்றனர். கடலோர பகுதியில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருதல், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், முன் திட்ட நகல் தயாரித்தல் ஆகியவை ரூ.5 கோடியே 12 லட்சத்து 78 ஆயிரம் செலவில் 131 பணிகள் நடந்து வருகிறது. மேலும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு 934 குழுக்களில் 220 குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 714 குழுக்களுக்கு வங்கிகள் மூலம் நேரடி கடன், பொருளாதார கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்கு 150 பேர் தேர்வு செய்யப்பட்டு டிரைவிங், வெல்டிங், ஏ.சி.,மெக்கானிக், மொபைல் ரிப்பேரிங், செவிலியர் உதவியாளர் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என மகளிர் திட்ட அலுவலர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

source: dinamalar

No comments:

Post a Comment