Islamic Widget

November 04, 2011

அண்ணா நூலக இடமாற்றம்: ஜவாஹிருல்லா அறிக்கை!


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்துள்ள முடிவு ஏற்புடையதாக இல்லை என்றும் அதனை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்றும்  அதிமுகவின் கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி  கேட்டுக்கொண்டுள்ளது.
 அக்கட்சியின் சட்டமன்றத் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில்,
"சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.170 கோடி செலவில் அமைக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அங்கிருந்து மாற்றுவதென தமிழக அரசு எடுத்துள்ள முடிவை மனிதநேய மக்கள் கட்சி துரதிருஷ்டவசமானது என கருதுகிறது.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமாக 12 லட்சம் நூல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான இணைய பத்திரிக்கைகள் இடம்பெற்ற இந்த நூலகம் சிறுவர் முதல் முதியவர் வரை, பள்ளிக்கூட மாணவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ள வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமையப் பெற்றிருந்தது.

இந்த நூலகம் தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்திருந்ததுடன், தமிழகத்திற்கு வருகை தந்து முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அவரைப் பாராட்டிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் பாராட்டுக்களையும் பெற்றது.

நூல்களை வாசிப்பதற்கான எழில் மிகுந்த, அமைதி நிரம்பிய சூழலில் உருவாக்கப்பட்ட இந்த நூலகத்தை, பரபரப்பும் மக்கள் நடமாட்டமும் அதிகமுள்ள கல்லூரி சாலையில் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றுவது என்ற தமிழக அரசின் முடிவு அறிவுப்பூர்வமானதாக இல்லை.

திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவதென எடுத்திருக்கும் முடிவு பொருத்தமானதல்ல.

எனவே தமிழக அரசு, பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அவரது நூற்றாண்டையொட்டி கட்டப்பட்ட இந்த சிறப்புமிகுந்த நூலகத்தை இடமாற்றம் செய்வதென்ற முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்து, அது மீண்டும் கோட்டூர்புரத்திலேயே இயங்க வழிவகை செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது."

என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment