Islamic Widget

November 15, 2010

உணவுப் பொருட்களை பதப்படுத்தி பாதுகாக்க அதிநவீன தொழில்நுட்பம் தந்து உதவத் தயார்

புதுடில்லி : "இந்தியாவில் விவசாய விளை பொருட்கள் வீணாவதை தடுக்கும் வகையில், அதிநவீன பதப்படுத்தும் தொழில்நுட்பங்களை வழங்க தயாராக இருப்பதாக ஐரோப்பிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

டில்லியில் சர்வதேச கோல்டு செயின் ஸ்டோரேஜ் நிறுவனங்களின் கூட்டமைப்பின்(ஜி.சி.சி.ஏ.,) சார்பில், வர்த்தக கண்காட்சி நடந்தது. இதில் பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் கோல்டு செயின் ஸ்டோரேஜ் நிறுவனங்கள் கலந்து கொண்டன. கண்காட்சியில், விவசாய விளைபொருட்களை பதப்படுத்தும் அதிநவீன "கோல்டு செயின் ஸ்டோரேஜ்' தொழில்நுட்பம் பற்றி விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.


இந்த கண்காட்சி குறித்து உணவு மற்றும் பதப்படுத்துதல் துறை செயலர் அசோக் சின்கா கூறியதாவது: உலகின் மிகப்பெரிய விவசாய நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஆனால், நாட்டில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களை பாதுகாப்பதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்குகள் இல்லாததால், ஆண்டுதோறும் 70,000 கோடி ரூபாய் மதிப்புடைய நெல், கோதுமை மற்றும் பழங்கள் ஆகியவை வீணாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் அரசாங்கத்திற்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.இதை தடுக்கும் வகையில், இந்தியாவில் விவசாய விளை பொருட்களை "கோல்டு செயின் ஸ்டோரேஜ்' என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் பதப்படுத்தும் முறையை ஊக்கும்விக்கும் நோக்கில், இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

மேலும், கோல்டு செயின் ஸ்டோரேஜ் கிடங்குகளை அமைப்பதற்கு, விவசாயிகளுக்கு வங்கிகள் எளிய முறையில் கடனுதவி வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும். இந்தியாவில் கோல்டு செயின் ஸ்டோரேஜ் சந்தையின் மதிப்பு தற்போது 12,000 கோடியாக உள்ளது. வரும் 2015ம் ஆண்டில் இதன் சந்தை மதிப்பு 60,000 கோடியாக உயரும். எனவே கோல்டு செயின் ஸ்டோரேஜ் துறைக்கு இந்தியாவில் சிறப்பான எதிர்காலம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, இந்திய நிறுவனங்களுடன் இணைந்து கோல்டு செயின் ஸ்டோரேஜ் கிடங்குகளை அமைக்கவும், தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளவும் ஐரோப்பிய நிறுவனங்கள் விருப்பமும், ஆர்வமும் தெரிவித்துள்ளன. இவ்வாறு அசோக் சின்கா கூறினார்.

Source:dinamalar

No comments:

Post a Comment