Islamic Widget

November 26, 2010

தொலைபேசி எண் நீடிக்க புது வசதி


                                                               வேகமாக வளரும் இந்திய தொலை தொடர்புத்துறை

இந்தியாவில், மொபைல் தொலைபேசி உபயோகிப்பாளர்கள், இனிமேல் தங்களது மொபைல் எண்ணை மாற்றாமலேயே, சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக்கில் இந்த சேவையை, தொலைத் தொடர்புத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கபில் சிபல் இன்று துவக்கி வைத்தார்.
இந்தியா முழுவதும், அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி முதல் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வசதி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டாலும், சேவை வழங்கும் நிறுவனங்கள் அதற்குத் தயாராகாதது உள்பட பல்வேறு காரணங்களால் அது தாமதமாகி வந்தது. தற்போது அது நடைமுறைக்கு வந்திருக்கிறது.
ஒரு நிறுவனத்திடமிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு தனது சேவையை மாற்றிக் கொள்ள விரும்பும் உபயோகிப்பாளர், புதிய நிறுவனத்துக்குச் சென்று உரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, 19 ரூபாய் கட்டணம் செலுத்தினால் அது புதிய நிறுவனத்துக்கு மாறிவிடும். ஆனால், உபயோகிப்பாளர் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது ஒரே நிறுவனத்திடம் சந்தாதாரராக இருக்க வேண்டும்.
எம்என்பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சேவையைப் பெற விரும்பும் உபயோகிப்பாளர்கள், ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வந்த தொலைபேசி சேவை நிறுவனத்திடம் கட்டணப் பாக்கி எதையும் வைத்திருக்கக் கூடாது.
போஸ்ட் பெய்ட் எனப்படும் மாதாந்திர பில் அடிப்படையில் கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்கள், ப்ரீ பெய்டு எனப்படும் முன்னதாகவே பணம் செலுத்தி மொபைல் தொலைபேசி பயன்படுத்துவோர் ஆகிய அனைவருமே இந்தப் புதிய சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஒரு நிறுவனத்திடமிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு சேவையை மாற்றுவதற்கு, ஏழு நாட்கள் பிடிக்கும்.
இந்தப் புதிய சேவையால், தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களிடையே போட்டி அதிகரிக்கும் என்றும், அதனால், உபயோகிப்பாளர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போதைய நிலையில் சுமார் 700 மில்லியன் மொபைல் தொலைபேசி சந்தாதாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source:bbctamil

No comments:

Post a Comment