நாடு முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசு அதிகரிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து கடந்த ஜுன் மாதம் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியது. மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என்றும் அனுமதித்தது.
அதுவரையிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் விலை நிர்ணயம் இருந்து வந்தது. மத்திய அரசின் முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய போதிலும், அந்த முடிவை திரும்பப்பெறவில்லை. இந்த சூழ்நிலையில், ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது.
அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசு அதிகரிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால், நாடு முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விலை உயர்ந்தது. எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதித்த பிறகு, முதன் முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்வைத் தொடர்ந்து, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.51.83 ஆக அதிகரித்தது. இதுபோல சென்னையில் ரூ.56.31 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.55.69 ஆகவும், மும்பையில் ரூ.56.25 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்ற பொதுத்துறை நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவையும் பெட்ரோல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. அதற்கான அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகும்.
இது தொடர்பாக எண்ணெய் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை. முன்பு கூட்டாக விலைகளை நிர்ணயித்ததால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீது குறை கூறப்பட்டன. தற்போது, ஒவ்வொரு எண்ணெய் நிறுவனங்களும் வெவ்வேறு நாட்களில் சுதந்திரமாக விலைகளை நிர்ணயம் செய்து கொள்கின்றன'' என்றார். Source: Maalaimalar
No comments:
Post a Comment