உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது.
தீர்ப்பு வெளியான பிறகு கலவரம் ஏற்படலாம் என்று அச்சம் நிலவுகிறது. இதையடுத்து பாதுகாப்பு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் நாடெங்கும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த நகரங்களில் அயோத்தி தீர்ப்பு காரணமாக பதற்றம் ஏற்படக் கூடும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. இந்த ஆய்வில், உத்தரபிரதேசம், குஜராத், மராட்டியம், கர்நாடகா மாநிலங்களில் உள்ள 32 நகரங்களில் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த 32 நகரங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
நாடெங்கும் மக்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்கள், விமான நிலையங்கள், சந்தைகளில் மத்திய பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியாகும் போது தேவைக்கு ஏற்ப விரைந்து செயல்படும் ஒரு திட்டத்தையும் மத்திய உள்துறை வகுத்துள்ளது. அதற்கு ஏற்ப படை நகர்த்தல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வட மாநிலங்களில் உள்ள சில இந்து அமைப்புகளும், முஸ்லிம் இயக்கங்களும் அயோத்தி தீர்ப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்த அமைப்புகளின் நடவடிக்கைகளை மத்திய உளவுத் துறை கண்காணித்து வருகிறது. தேவைப்பட்டால் கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த 64 ஆயிரம் பாதுகாப்புப்படை வீரர்கள் அனுப்ப வேண்டும் என்று முதல்-மந்திரி மாயாவதி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் மத்திய அரசு 5200 பாதுகாப்பு படையினரையே அனுப்பியுள்ளது. இதனால் மாயாவதி அதிருப்தி அடைந்துள்ளார்.
Source: Maalaimalar
No comments:
Post a Comment