Islamic Widget

August 31, 2010

வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...



உள்நாட்டிலேயே எல்லோருக்கும் வேலை என்பது சாத்தியமற்ற ஒன்று. இங்கு கிடைக்கும் சம்பளத்தில் எகிறும் விலைவாசிகளுக்கு ஏற்ப எல்லோராலும் தேவைகளை தீர்த்துக் கொள்ள முடிவதில்லை. எனவே 'திரை கடலோடியும் திரவியம் தேடு' பொன் மொழிக்கேற்ப வெளிநாடுகளுக்கு வேலை தேடி கிளம்பி விடுகின்றனர். இப்படி வெறும் வருவாய்க்கு மட்டுமின்றி வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ளவும், அனுபவிக்கும் ஆசையிலும் வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. டாக்டர், இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சொல்வது போன்று வெளிநாட்டில் வேலை என்பதையும் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் ஊட்டி வளர்க்கின்றனர். வேலை செய்வதற்கான சூழலும், வாய்ப்புகளும் அதிகம் என்பதாலும், திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்காகவும் வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் அதிகம். ஆனால் முக்கிய இலக்கு வருவாய்தான். இரண்டாவது இடத்தில்தான் வாழ்க்கை வசதிகள்...


இப்போதெல்லாம் தொழிற்கல்வி பயிலுபவர்களின் கனவே வெளிநாட்டு வேலை என்பதாகி விட்டது. ஐஐடி படித்தவர்கள் முதல் ஐடிஐ முடித்தவர்கள் மட்டுமின்றி, ஆரம்ப கல்வியை முடிக்காதவர்களும் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் பட்டியலில் இருக்கின்றனர். அங்கு துப்புரவு உள்ளிட்ட கடைநிலை வேலையை செய்ய செல்கின்றனர். இந்தியாவில் பல ஆண்டுகள் உழைத்து சிரமப்படுவதை விட வெளிநாட்டில் சில ஆண்டுகள் கஷ்டப்பட்டு, கைநிறைய சம்பாதித்து, செட்டிலாகி விடலாம் என்பது வெளிநாடு செல்பவர்களின் தாரக மந்திரம். இந்த மந்திரம் வேலை செய்கிறதா? இல்லை, வெளிநாட்டு வேலை மோகத்தை பயன்படுத்தி ஏமாற்றும் பேர்வழிகளின் தந்திரம் எடுபடுகிறதா என்பது தான் கேள்விக்குறி வெளிநாடு போகும் எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களா? வெளிநாடுகளில் வேலைக்காக செல்லும் பலர் வருவாயை மட்டுமல்ல; வாழ்க்கையையும் தொலைத்து விடுகின்றனர் என்பது தான் உண்மை.

பரம்பரை சொத்தை விற்று, நகை நட்டுகளை அடகு வைத்து, இல்லாவிட்டால் கந்து வட்டி, மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கி ஏஜென்ட் கையில் கொடுக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே வாய்ப்பு ஏற்படுத்தி தருகின்றனர். மற்றவர்கள் ஏப்பம் விடுகின்றனர். வேலைக்காக அலைந்தவர்கள் கொடுத்த காசை திரும்ப கேட்டு அலைவது பெருங்கொடுமை. வெளிநாட்டுக்கு போகப் போகிறோம் என்ற ஆசையில் இருந்த வேலையும் விட்டு, வேறு வேலைக்கும் போக முடியாமல் தவிப்பது தனிக்கதை. வெளிநாடு சென்றவர்களின் நிலைமை இன்னும் மோசம். எந்த வேலைக்கு கூப்பிட்டார்களோ அந்த வேலையை தர மாட்டார்கள். சொன்ன சம்பளமும் தர மாட்டார்கள். நேரம், காலம் கிடையாது. விடுமுறை கிடையாது. நேரத்திற்கு சாப்பிட முடியாது. அடி உதைகளுக்கு பஞ்சமிருக்காது. பாதாள அறைகளில் அடைத்து வைப்பார்கள். அட்ஜெஸ்ட் செய்தாலும் நான்கு பேர் தங்கக் கூடிய அறையில் 40 பேரை தங்க வைப்பார்கள். இப்படி சித்ரவதைகள் மட்டுமின்றி சில நேரங்களில் உயிரிழப்புகளும் தொடர்கதைதான்.

ஆண்களுக்கு இப்படி பிரச்னைகள் என்றால், வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் அனுபவிக்கும் கதைகள் கண்ணீர் சிந்த வைக்கின்றன.



வேறு வேலையே இல்லையா?



மலேசியாவில் பினாங்கு, கெடா ஆகிய இடங்களில் உள்ள பிரபலமான உணவகம். தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு ஏழு மாதங்களாக சம்பளம் தரவில்லை. இந்த பிரச்னை தொடர்பாக ஊழியர்கள் கேட்டபோது அடி உதைதான் கிடைத்தது. அங்கிருந்து தப்பித்தவர்கள் நேராக காவல் நிலையத்திற்கு சென்றனர். உடனடியாக முதலாளிக்கு போன் போனது. முதலாளி என்ன சொன்னாரோ? புகார் கொடுத்தவர்களுக்கே அடி விழத் தொடங்கியது. தப்பித்தால் போதும் என்று ஓடி வந்து விட்டனர். அடிவாங்கிய 13 பேரில் ஒருவரான சாகுல் அமீது கூறுகையில், "அதன்பிறகு இந்திய தூதரகத்திற்கு புகார் செய்ய சென்றோம். அங்கிருந்தவர்கள், உங்களை யார் இங்கு வரச் சொன்னது. எங்களுக்கு வேறு வேலையே இல்லையா என்று திட்டினார்கள். தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் ஊர் வந்து சேர்ந்தோம்’’ என்றார். முக்கியமான விஷயம் அந்த பிரபலமான மலேசிய ஓட்டலின் கிளை சென்னை தி.நகரில் உள்ளது.



தமிழர்களும் கண்டிக்கிறார்கள்



இந்தியத் தமிழர்களுக்கு ஒட்டுமொத்தமாக மலேசியாவில் உள்ள தமிழர்கள் எதிரானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. மலேசியாவில் உள்ள பத்திரிகைகள் இந்திய தமிழர்களின் பிரச்னைகளை எழுதுகின்றன. முதலாளிகளின் அக்கிரமங்களை கண்டிக்கவும், வெளிச்சம் போட்டு காட்டவும் அவை தயங்குவதில். அதேபோல் தமிழர்களால் நடத்தப்படும் பல்வேறு தமிழர் அமைப்புகள், வணிக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் இந்தியத் தமிழர்களின் பிரச்னைகளுக்காக போராடுவதுடன் உதவியும் செய்கின்றன. மலேசிய இந்திய காங்கிரஸ், மலேசிய தமிழ் நெறிக் கழகம், அந்நியத் தொழில் நட்புறவுக் கழகம், மனித உரிமை ஆணையம் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.



கதறடிக்கும் மலேசியா



வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும் அவதிக்குள்ளாக்கும் நாடு எது என்று கேட்டால், எல்லோரும் இலங்கையைதான் சுட்டிக் காட்டுவார்கள். அது மண்ணின் மைந்தர்கள் படும் கஷ்டம். ஆனால் இங்கிருந்து பிழைக்க சென்ற தமிழர்களை அதிகம் கசக்கி பிழியும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிப்பது மலேசியா. இப்பிரச்னைகள் தொடர்பாக, மலேசியாவில் சில மாதங்கள் தங்கி கள ஆய்வு மேற்கொண்டு வந்திருக்கும் சு.சிவசோமசுந்தரம் சொன்னது:

ஏழ்மையால் படிக்க முடியாமல், வாழ்க்கையோடு போராடுபவர்கள்தான் அதிக அளவில் வெளிநாட்டு வேலைக்கு செல்கின்றனர். தெரிந்த ஏஜென்ட்களிடம் எழுபதாயிரம் முதல் எண்பதாயிரம் ரூபாய் வரை கொடுக்கிறார்கள். ஏஜென்ட்களில் பெரும்பான்மையானவர்கள் சுற்றுலா விசாவை வாங்கி, மலேசியாவுக்கு அனுப்பி விடுகின்றனர். அங்கு இருக்கும் ஏஜென்ட்களோ, ஓட்டல் முதலாளிகளிடம் விற்று விடுகிறார்கள். சில இடங்களில் 20 மணி நேரம் கூட வேலை செய்கிறார்கள். சம்பளம் ஒழுங்காக தருவதில்லை. குறைந்தது 6 மாதமாவது சும்மா தான் வேலை செய்ய வேண்டும்.

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர், திருச்சி, கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான் மலேசியாவில் அதிக அளவில் இருக்கின்றனர். இன்றைய நிலவரப்படி சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்கள் இருக்கின்றனர். இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் உணவகங்களில்தான் வேலை செய்கின்றனர். இதற்காக ஒரு ஒப்பந்தமும் போடுவார்கள். அது மலாய் மொழியில் இருக்கும். அதை புரிந்துக் கொள்ளமல், நமது ஆட்கள் கையெழுத்து போட்டு விடுகின்றனர். இவர்களுக்கு வேலைக்கான விசாவில் வந்திருக்கோமா, சுற்றுலா விசாவில் வந்திருக்கோமா என்பதுக் கூட தெரியாது. மேலும் வேலைக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் முதலாளிகள் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.

இப்படி விதிமுறைகள் தெரியாதவர்கள் பிரச்னைகளில் சிக்கும் போது அவர்கள் சொல்லும் புகார் எடுபடாது. மாறாக முதலாளிகள் சொல்வதுதான் எங்கும் எடுபடும். மீறினால், விசா பிரச்னையில் சிறையில் அடைத்து விடுகின்றனர். இப்படி மலேசிய சிறைகளில் மட்டும் குறைந்தது 5 ஆயிரம் பேர் இருப்பார்கள். இவர்களில் தமிழர்கள் அதிகம்.



உதை உண்டு; ஊதியம் இல்லை



சவுதி அரேபியா, குவைத், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு போக தமிழ்நாட்டில் உள்ள ஏஜென்ட்கள் 80 ஆயிரம் ரூபாய் வரை வாங்குகின்றனர். கேட்டால் பாஸ்போர்ட், விசா, ஒர்க் பர்மிட், விமான டிக்கெட் என்று பட்டியலிடுவார்கள். கொடுக்கும் பணத்தில் இவர்கள் 30 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொள்வார்கள். அதன்பிறகு மும்பை கூட்டிச் செல்வார்கள். அங்குள்ள ஏஜென்ட்டுக்கு 20 ஆயிரம். மும்பை ஏஜென்ட் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு கூட்டிச்செல்வார். அங்கு ஏதாவது ஒரு முதலாளியிடம் குறைந்தது 30 ஆயிரத்திற்கு விற்று விடுகின்றனர். உதாரணத்திற்கு மலேசியாவாக இருந்தால் வெளிநாட்டுக்காரர் அங்கு பணியாற்ற அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதனை லெவி என்கிறார்கள். அதற்கு 1500 வெள்ளி கட்டணம். ஒரு வெள்ளி என்பது நமது பணத்தில் 14 ரூபாய் 40 காசு(கடந்த வார மதிப்பு). நமது ஊருக்கு கணக்கிற்கு 21,600 ரூபாய். ஆக 50,600 ரூபாய் கணக்கை கடனாக வைத்துக் கொண்டு வேலை செய்ய சென்றவர்களுக்கு சம்பளம் கொடுக்க மாட்டார்கள். கடன் கழிந்த பிறகுதான் சம்பளம். அதுவும் குறைந்த சம்பளம் 300 வெள்ளிதான். அதிலும் தொப்பிக்கு 10 வெள்ளி, சீருடைக்கு 40 வெள்ளி கழித்து விடுவார்கள். சில நேரங்களில் சாப்பாட்டு காசையும் கழித்து விடுவார்கள்.



வெளிநாடுகளில் ஆடு மேய்த்தவன் நான்



இப்படி ஒரு பலகையில் எழுதி தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு கிராம கிராமமாய் போய் 'வேலைத் தேடி வெளிநாடுகளுக்கு போகாதீர்கள்' என்று பிரசாரம் செய்துக் கொண்டிருக்கிறார் சா.சேரன்.

அவர் சொன்ன அனுபவங்கள்: கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர். அப்பா சதாசிவம் ஆசிரியர். வெளிநாடு போனவர்கள் எல்லாம் ஊரில் வீடு கட்டி வசதியாக இருக்க, ஆசிரியர் வேலை செய்யும் தான் மட்டும் முன்னேற வழியில்லையே என்ற ஏக்கம். தனது மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி சம்பாதிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை. அதை மகனுக்கும் உண்டாக்கினார். கல்லூரியில் படிப்பதை விட கைத் தொழிலாக தையல் வேலையை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். காரணம் தையல் வேலை தெரிந்தவர்களுக்கு வெளிநாட்டில் நல்ல சம்பளம் என்று கேள்விபட்டதுதான். கற்றுக் கொண்டதும், கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டார். நிலத்தை விற்றும், நகைகளை வைத்தும் பணத்தை திரட்டினார்கள். பக்கத்து ஊரில் இருந்த ஏஜென்ட்டிடம் கொடுத்தார். இதோ, அதோ என்று போக்கு காட்டிக் கொண்டிருந்த ஏஜென்ட் ஒரு நாள் ரயிலில் மும்பை கூட்டிச் சென்றார். அங்கு சில வாரங்கள் காக்க வைத்தனர். ஒருவழியாக சவுதி அரேபியா போய் சேர்ந்தார் சேரன். இது நடந்தது 1995ம் ஆண்டு. அங்கு போனால் தையல் வேலை தரவில்லை. தொலை தூரக் கிராமத்தில் ஒரு முதலாளியிடம் அனுப்பினார்கள். அந்த முதலாளியிடம் நிறைய ஆடுகள். அந்த ஆடுகளை மேய்க்கும் வேலைதான் சேரனுக்கு. அதுமட்டுமல்ல ஏஜென்ட் சொன்னது போன்று பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கிடையாது. வெறும் ஐந்தாயிரம் மட்டும்தான். அதிலேயே சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் ஆடு மேய்க்க வேண்டும். பிறகு தோட்டத்தில் ஏதாவது வேலை இருந்தால், அதை செய்ய வேண்டும். விடுமுறை கிடையாது.

வெளிநாடுகளில் ஆடு மேய்ப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியா, இலங்கையை சேர்ந்த தமிழர்கள்தான். அங்கிருந்த 3 ஆண்டுகளில் அவர் பட்ட சித்ரவதைகளும், கஷ்டங்களும்தான் அவரை இன்று தமிழகத்தில் கிராம கிரமமாக சென்று பிரசாரம் செய்ய வைத்துள்ளது. வெளிநாடு செல்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும், அவர்களை மீட்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ள மீட்பு அறக்கட்டளையின் தலைவராக இருக்கிறார்.



பணத்தை பெருக்க குப்பையை பெருக்க ஆர்வம்



வளைகுடா நாடுகளில் சாலை, பள்ளிக் கூடங்களில், நிறுவனங்களில் துப்புரவு பணிகளை செய்வதில் சிலர் ஆர்வம் காட்டுகிறார்கள். சாலையில் கிடைக்கும் குளிர்பான டப்பாக்களை சேகரித்து விற்றால் மாத்திற்கு 10 ஆயிரம் வரை கூட சம்பாதிக்கலாமாம். இதனால் சிலர் ஆடு மேய்ப்பதை விட்டு விட்டு இந்த வேலைக்கு ஓடி விடுகின்றனர். ஆனால் வாடகை 5 ஆயிரம், சாப்பிட 5 ஆயிரம், மின்சாரம், தண்ணீருக்கு 5 ஆயிரம் என மாதம் கூடுதலாகவே செலவு செய்ய வேண்டியிருக்கும். தங்குவதற்கு நிர்வாகமே இடம் கொடுத்தால்தான் உண்டு.



காசில்லாததால் சிறையில் வாடும் தமிழர்கள்



அரபு நாடுகளில் எத்தனை இந்தியர்கள் சிறையில் இருக்கின்றனர் என்ற பட்டியலை சமீபத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

அவர் வாசித்தபடி துபாய், ஷார்ஜா, அல்&அய்ன் என ஐக்கிய அரபு நாடுகளில் 1361 பேர், சவுதி அரேபியாவில் 1226 பேர், குவைத்தில் 263 பேர், பஹ்ரைனில் 91 பேர், கத்தாரில் 28 பேர் என மொத்தம் 3095 பேர் சிறையில் உள்ளனர். இவர் வாசிக்காத விவரம் இவர்களில் 50 சதவீத்திற்கும் அதிகமானவர்கள் தமிழர்கள் என்று 'வளைகுடா தமிழ் வட்டம்' என்ற அமைப்பு தெரிவிக்கிறது. இந்த அமைப்பின் நிர்வாகி எஸ்.ஆர்.அல்லாபிச்சை, ‘அரபு நாடுகளில் உள்ள சிறைகளில் பலர் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் இருக்கின்றனர்’ என்கிறார். இதே கருத்தை சொல்லும் மலேசியாவில் கள ஆய்வு மேற்கொண்ட சிவசோமசுந்தரம், Ô‘மலேசிய சிறைகளில் உள்ள 5000 தமிழர்கள் எல்லோரும் விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருந்தது, பாஸ்போர்ட் இல்லாதது என குடியுரிமை மீறியதால் தண்டிக்கப்பட்டவர்கள்தான். இவர்களுக்கு சட்டப்படி தண்டனை 3 மாதங்கள்தான். சிறையில் இருந்து மீட்டு அனுப்பி வைக்க ஆட்கள் இல்லாததால் இப்படி சிறையில் இருக்கின்றனர். மலேசியாவில் இருந்து தமிழகம் திரும்புவதற்கான பயணச்செலவை யாராவது ஏற்றுக் கொண்டால் கூட எல்லோரும் ஊர் வந்து சேர்ந்து விடுவார்கள்Õ’ என்றார்.


Source: Dinakaran

No comments:

Post a Comment