Islamic Widget

July 04, 2012

பாபர் மசூதி இடிப்பு - நீரோவைப் போன்றிருந்தார் நரசிம்ம ராவ்: அர்ஜுன் சிங்!

டில்லி - பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ், ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போன்று இருந்தார் என மத்திய முன்னாள் அமைச்சர் அர்ஜுன் சிங் தன்னுடைய நூலில் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் அர்ஜுன் சிங் தன்னுடைய சுயசரிதையை அசோக் சோப்ராவுடன் இணைந்து "எ கிரைன் ஆஃப் சேன்ட் இன் த ஹோர்க்லாஸ் ஆஃப் டைம்" என்ற பெயரில் எழுதி வந்தார். கடந்த மார்ச் 4ஆம் தேதி அர்ஜுன் சிங் காலமானபோது நிறைவு பெறாமல் இருந்த நூல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நூலில் விரிவாகத் தரப்பட்டுள்ள "பாபர் மசூதி இடிப்பும் அதன் விளைவுகளும்" என்ற பகுதியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தி வந்தபோது, பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் தன்னுடைய அறையைப் பூட்டிக் கொண்டு இருந்தார் எனக் கூறியுள்ளார்.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மதியத்திற்குப் பின், பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும் பிரதமரின் இல்லத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
பிரதமர் தற்போது யாரிடமும் பேசத் தயாராக இல்லை என்று எனக்குக் கூறப்பட்டது. பிரதமர் டில்லியில்தான் இருக்கிறாரா? அல்லது வெளியூர் சென்றுள்ளாரா? என்று நான் கேட்டேன். அவர் டில்லியில்தான் இருக்கிறார். ஆனால் அவர் தன்னுடைய அறையை அவர் தாழிட்டுக் கொண்டார். தன்னை யாரும் எதற்காகவும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவர் உத்தரவிட்டுள்ளதாக தொலைபேசியில் பேசியவர் கூறினார்.
இந்தக் காட்சி, ரோம் நகர் பற்றி எரிந்து கொண்டிருந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்ற கூற்றை எனக்கு நினைவூட்டியது. பஞ்சாபில் ஒரு நிகழ்ச்சியில் இருந்த நான் அவர்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு டில்லி விரைந்தேன்.
இந்தச் செய்தி கேள்விப்பட்டதைத் தொடர்ந்து மசூதியை இடிப்பது போன்ற காட்சி என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. இந்த நாட்டின் மிக மோசமான நிகழ்வு இது என்றும் இதனால் ஏற்படும் இழப்புகள் கணக்கிட முடியாதவை என்றும் எனக்கு அப்போது தோன்றியது.
இந்தியாவின் மதச்சார்பற்றத் தன்மை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிகழ்வு இது.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பே, அது குறித்து நான் நரசிம்ம ராவிடம் எச்சரித்தேன். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. நாம் இந்துத்துவா மற்றும் பாஜகவின் இயந்திரமாக மாறிவிட்டோமா என்று ஒரு நாள் கோபமிகுதியால் அவரிடம் கேட்டுவிட்டேன்.
அதற்கு அவர், அது (இடிப்பு) எப்போது நடைபெறும் என்று கேட்டார். அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நான் அவருக்குப் பதில் அளித்தேன்.
நாட்டின் அரசியல் நிகழ்வுகள் குறித்த மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டக் குறிப்புகள் எப்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது எப்போது பொதுவுக்கு வந்தாலும், அயோத்தி விவகாரத்தில் இந்த அரசு எத்தகைய தவறுகளைச் செய்தது என்பதை கூட்டக் குறிப்புகள் உணர்த்தும்.
இவ்வாறு அர்ஜுன் சிங் தன்னுடைய நூலில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment