Islamic Widget

January 08, 2012

முழுமையாக நிவாரணம் வழங்கப்படும் – யூனுஸ்


தானே புயல் ஓய்ந்துப் போனாலும் அதன் பாதிப்புகளிலிருந்து மீளாத மக்கள் தங்கள் குறைப்பாடுகளை வார்டு உறுப்பினர்களிடம் சொல்லி தீர்ப்பது இன்னும் ஓயவில்லை.
அரசு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் பணியில் பரங்கிப்பேட்டையின் அனைத்து கவுன்ஸிலர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்றால் அது மிகையில்லை.
அரசியல் கட்சி உறுப்பினர்களிலிருந்து சுயேட்சை உறுப்பினர்கள் வரை தங்களை முழுமையாக தங்களை இந்தப் பணியில் இணைத்துக் கொண்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்களை சந்தித்தோம்.
4வது வார்டு தருமபிரகாஷ் குறிப்பிடும் போது,
400 குடும்பங்களை கணக்கெடுத்துள்ளோம்.  குடும்ப அட்டை பிரச்சனை நீடிப்பதால் குடும்ப அட்டை இல்லாதவர்களின் பாதிப்பை நாம் கண்டுக் கொள்ளாமல் விட்டு விட முடியாது. அவர்களுக்கான நிவாரண ஏற்பாடுகளையும் செய்கிறோம் என்றார்.
11வது வார்டு இப்ராஹீமை தொடர்புக் கொண்டோம்.
எனது வார்டில் 360 குடும்பங்களை இதுவரை கணக்கெடுத்துள்ளோம்.  பரங்கிப்பேட்டையின் 8  கவுன்ஸிலர்கள்  இந்தப்பகுதியின் நிவாரண பொறுப்பில் இருக்கும் வனத்துறை அமைச்சரை சந்தித்து  மனு கொடுத்து நிலவரத்தை விளக்கினோம்.  அரசின் நிவாரணம் மக்களுக்கு விரைவில் கிடைக்கும் என  நம்புகிறோம் என்றார்.    தனது வார்டில் முழுமையாக மின் இணைப்புகள் சரிசெய்யப்பட்டதையும், வார்டு  இளைஞர்களுடன் ஈடுபட்டு தனது வார்டை 75 சதவிகிதத்திற்கு மேல் தூய்மைப்படுத்தி விட்டதையும் குறிப்பிட்டு  மீட்புப் பணியில் பெரும் பங்காற்றிய O.செய்யத் ஆரிபையும் நினைவுக்கூர்ந்தார்.
2வது வார்டு உறுப்பினர் பஸிரியா கணவர் ஜாபர் கூறுகையில்
270 குடும்பங்களை கணக்கெடுத்துள்ளோம்.  கூரை வீடு, ஓட்டு வீடுக்கு முழுமையாக உதவித் தொகை வழங்கப்படும்.  சீலிங் வீடுகள் பரிசீனைக்கு உட்படும்  என நினைக்கிறேன் என்று தகவலளித்தார்.
12வது வார்டு உறுப்பினர் பொருட்செல்வி
இந்த 12 வது வார்டு அகரம் பகுதியை ஒட்டி இருப்பதால் அகரம் மணியக்காரர் ஆரம்பத்தில் வந்து ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்.  பிறகு பரங்கிப்பேட்டை பேருராட்சியிலிருந்து மீண்டுமொரு கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகள் வந்தார்கள்.  நாங்கள் மொத்தம் 654 வீடுகளுக்கு கணக்கு கொடுத்தோம்.  அவற்றில் 565 வீடுகள் மட்டுமே உதவித் தொகைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  மற்ற வீடுகளுக்கும் உதவி தொகை வேண்டும் என்ற அடிப்படையில் பேருராட்சி வழிகாட்டல் படி 8 கவுன்சிலர்கள் கிள்ளை சென்று வனத்துறை அமைச்சரை சந்தித்து விடுபட்ட வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மனுவளித்து வந்துள்ளோம்.  ஓரிரு நாட்களில் நிவாரணம் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்றார்.
பேரூராட்சித் தலைவர் முஹம்மத் யூனுஸை தொடர்புக் கொண்டு விபரம் கேட்டோம்.
பரங்கிப்பேட்டையில் உள்ள 18 வார்டுகளை உள்ளடக்கிய கூரை வீடு, ஓட்டு வீடு மட்டும் முதலில் கணக்கெடுக்கப்பட்டது.  அரசு இந்த வீடுகளை மட்டும் கணக்கெடுக்க சொன்னதன் அடிப்படையில் 5400 வீடுகள் கணக்கிடப்பட்டன.  இருந்தாலும்  சீலிங் மீது மரம் விழுந்து பாதிப்புக்குள்ளானது உட்பட இன்னும் சில காரணங்களால் பாதிக்கப்பட்ட வீடுகளை விட்ட விட  முடியாது என்று எண்ணி, அவர்களுக்கும் நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்ற அடிப்படையில் மேற்கொண்டு 1500 வீடுகள் பற்றிய குறிப்பை V.O விடம் வழங்கி அதற்கும் அரசு நிவாரணம் பெறும் நிலை உள்ளது.  எனவே 6900 விடுகளுக்கு  ரூ, 2500 விதம் நிவாரணத் தொகை வழங்கப்படும். அனேகமாக ஓரிரு நாட்களில் இந்த உதவித் தொகை வழங்கும் பணி  துவங்கி ஒரு வாரத்தில் முடியும்.
மொத்த வார்டுகளிலும் 120 குடிசைகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றிர்க்கு கூடுதல் நிவாரணம் வழங்கவும் முயற்சி எடுத்து வருகிறோம். பணம் பட்டுவாடா நேரடியாக அரசு அதிகாரிகளால் பொது இடங்களில் வைத்து வழங்கப்படும்.  கணக்கெடுப்பில் மட்டுமே நாங்கள் பங்காற்றினோம் என்றும் கூறினார்.
நிவாரணத் தொகை வழங்குவதில் குளறுபடிகள் ஏற்பாட்டாலோ, அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்காமல் போனாலோ உரியவர்களிடம் முறையிடுவதோடு www.pnotimes.com  இணையத்திற்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  மின்னஞ்சல் editor@pnotimes.com
நன்றி:pnotimes.

No comments:

Post a Comment