வங்கக்கடலில் உருவான “தானே” புயல், புதுவை – கடலூர் இடையே அதி வேகத்துடன் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் இன்று காலை சுமார் 7 மணிக்கு புதுவை அருகே பலத்த வேகத்துடன் கரையை கடந்தது.
கடலூர் மற்றும் புதுவைக்கு இடைபட்ட பகுதியில் புயல் கரையை கடந்தபோது சுமார் மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் கடலூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் புவனகிரி, காரைக்கால் நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புயல் கரையைக் கடந்தவுடன் வேகம் குறைந்து மேற்கு நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களான கோவை, சேலம், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று முழுவதும் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் துறைமுகத்தில் தற்போது 11 ஆம் எண் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடும் புயலினால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதை குறிக்கும் வகையில் 11 ஆம் எண் புயல் எச்சரிக்கைதான் அதிகபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுவதால் வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்புகள் கூட கிடைக்காமல் போகக்கூடிய அளவிற்கு அந்த புயல் காற்றினால் மோசமான கேடு விளையலாம் என்பதை குறிக்கும் வகையில் 11 ஆம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்படுகிறது.
No comments:
Post a Comment