Islamic Widget

December 01, 2011

இலவச பட்டாவுக்கு லஞ்சம் கேட்டதால் அரசு அலுவலகத்திற்குள் விஷ பாம்புகளை விட்ட வாலிபர்



உத்தரபிரதேச மாநிலம் பஸ்சி மாவட்டம் கரையா பகுதியைச் சேர்ந்தவர் ஹக்குள். இவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் இலவச வீட்டு மனை ஒதுக்கப்பட்டது. ஆனால் அவருக்கு அங்குள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் இலவச பட்டாவை வழங்க மறுத்தனர்.இதுபற்றி அவர் வருவாய் ஊழியர்களிடம் கேட்ட போது, லஞ்சம் கொடுத்தால்தான் உனக்கு இலவச பட்டா கிடைக்கும். இல்லாவிட்டால் தரமாட்டோம் என்று கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஹக்குள், தான் பிடித்து வைத்திருந்த 36 விஷ பாம்புகளை வருவாய் அலுவலகத்திற்குள் போட்டு விட்டு ஓடினார். அலுவலகத்திற்குள் திடீரென விஷ பாம்புகள் படையெடுத்து வந்ததை பார்த்து ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 4 பேர் மயங்கி விழுந்தனர். அவர்களை சக ஊழியர்கள் தூக்கிச் சென்றனர்
 
இதுபற்றி உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வன ஊழியர்கள் விரைந்து வந்து அலுவலகத்திற்குள் இருந்த 20 பாம்புகளை பிடித்தனர். அதன் பிறகும் ஊழியர்கள் உள்ளே செல்லத் தயங்கினர். வன ஊழியர்கள் அனைத்து பைல்களையும் அகற்றி பாம்புகள் இருக்கிறதா? என்று தேடினர். பாம்பு எதுவும் சிக்கவில்லை. அதன் பிறகே ஊழியர்கள் உள்ளே சென்றனர்.
 
கரையா நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹக்குளை கைது செய்தனர். அவன் கூறும்போது, எனக்கு அரசு இலவச வீட்டு மனை ஒதுக்கியது. ஆனால் இலவச பட்டாவுக்கு வருவாய் ஊழியர்கள் லஞ்சம் கேட்டனர். என்னைப் போன்ற ஏழை தொழிலாளர்களிடம் லஞ்சம் கேட்டு அலைக்கழிக்கவிட்ட அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்தேன். இதற்காக நான் பிடித்து வைத்திருந்த பாம்புகளை அரசு அலுவலகத்திற்குள் போட்டேன் என்றான்.

No comments:

Post a Comment