Islamic Widget

November 13, 2011

பண்பொழி கிராமத்தில் வெடிபொருள் - பின்னனி என்ன!

மதுரையில் கடந்த 28.10.11ல் அத்வானியின் ரதயாத்திரை பாதையில் மர்ம நபர்கள் பைப் வெடிகுண்டு வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 2 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.


மேலும், சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தமிழகம் முழுவதும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிலரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் முஸ்லிம்களிடையே காவல்துறை மீது வெறுப்பை ஏற்படுத்தியது. காவல்துறையின் இச்செயலால் முஸ்லிம்கள் அதிருப்திக்கு ஆளானார்கள்.
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தமிழ் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"அத்வானியின் ரதயாத்திரை பாதையில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நேரு என்பவரைக் கைது செய்தனர். பின்னர் திடீரென்று முஸ்லிம்கள் தான் செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 28-ந் தேதி ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த பாப்புலர் பிரண்ட் உறுப்பினர் ஷாஜகான் என்பவரைக் காவல்துறை கைது செய்தது. அவரை வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை தொழ அனுமதிக்கவில்லை. பின்னர் மாலைவரை விசாரித்து விட்டு அனுப்பி விட்டது.
அதேபோல தென்காசியில் நவம்பர் 1 ல் பாப்புலர் பிரண்ட் மாவட்ட செயலாளர் சர்தார் மற்றும் நவாஸ் ஆகியோரை நள்ளிரவு 2 மணிக்குக் கைது செய்த்து. அவர்களை எங்கு கொண்டு செல்கிறோம் என்பதைத் தெரிவிக்காமல் கொண்டு சென்றுவிட்டு பிறகு மறுநாள் காலை 10 மணிக்கு விசாரணை முடித்து அனுப்பியுள்ளது.
இதற்கிடையே கடந்த 3-ந் தேதி தென்காசிக்கு அருகேயுள்ள பண்பொழி கிராமத்தில் சிறுவர்கள் வைத்து விளையாடிய ஒரு பெட்டி வெடித்துள்ளது. இதில் சிறுவர்கள் காயமடைந்தனர். இந்தச் சிறிய கிராமத்தில் வெடிபொருள் எப்படி வந்திருக்க முடியும் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.
அத்வானி செல்லும் பாதை காவல்துறையினருக்கு அக்டோபர் 26ம் தேதி இரவு தான் தெரியும் என்ற நிலையில், அந்தப் பாதையில் 2 நாட்களில் எப்படி குண்டுவைக்க முடியும். அதேநேரத்தில் ஒரு குக்கிராமத்தில் வெடிபொருள் இருந்தது ஆக இரண்டும் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தில் திடீர் வெடிகுண்டு கலாசாரம் தொடங்கியுள்ளது. இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை சரியான கோணத்தில் விசாரிக்க வேண்டும். காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் இதில் தனிகவனம் செலுத்த வேண்டும்.
அப்பாவி மக்களையோ, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக ஒரு சார்பு நிலையையோ காவல்துறை எடுக்காமல் சரியான கோணத்தில் நடுநிலையோடு விசாரித்து பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் தீய சக்திகளைக் கண்டுபிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என்று பாப்புலர் பிரண்ட் அரசை வலியுறுத்துகிறது."
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment