Islamic Widget

November 13, 2011

தமிழக குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை-வாங்கித் தந்தவர்களுக்கு கேரள அரசு விருது!

திருவனந்தபுரம்: கேரளப் பெண்ணை ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தமிழக நபருக்கு தூக்குத் தண்டனை வாங்கித் தந்த போலீஸார் மற்றும் வாதாடிய வக்கீல்களைப் பாராட்டியுள்ள கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவர்களுக்கு விருதளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த செளம்யா என்ற இளம் பெண் எர்ணாகுளத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இவர் தனது சொந்த ஊரான ஷோரனூருக்குப் போவதற்காக ரயிலில் பயணம் செய்தார். பெண்கள் பெட்டியில் அவர் பயணித்தார். பெட்டியில் அவர் மட்டுமே இருந்தார். இதைப் பார்த்த கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி அதில் ஏறினார். பின்னர் செளம்யாவை பலாத்காரம் செய்ய முயன்றார். அவரை எதிர்த்து செளம்யா போராடியதால் ஓடிக் கொண்டிருந்த ரயிலிலிருந்து செளம்யாவை கீழே தள்ளி விட்டார் கோவிந்தசாமி.

பின்னர் அவரும் கீழே குதித்தார். கீழே தள்ளி விடப்பட்டதால் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில் செளம்யாவை வெறித்தனமாக பாலியல் பலாத்காரம் செய்தார் கோவிந்தசாமி. பின்னர் ஓடி விட்டார். படுகாயமும், பாலியல் பலாத்காரமும் சேர்ந்ததால் செம்யாவின் நிலை மோசமானது. அவரை மீட்டவர்கள் திருச்சூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சில நாள் போராட்டத்திற்குப் பின்னர் செளம்யாவின் உயிர் பிரிந்தது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் கோவிந்தசாமியைக் கைது செய்தனர். அவர் மீது திருச்சூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், கோவிந்தசாமிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தூக்குத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ள கேரள முதல்வர் உம்மன் சாண்டி, அரசு சார்பில் அவர்களுக்கு விருது வழங்கபப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment