கடலூர் : சாஷன் கெமிக்கல்ஸ் கம்பெனியில் காஸ் கசிவால் நடந்த விபத்து பாதுகாப்பு குறைபாடு காரணமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள சாஷன் கெமிக்கல்ஸ் கம்பெனியில் கடந்த 7ம் தேதி இரவு 10.30 மணிக்கு ஹைட்ரோ புரோமின் காஸ் திடீர் கசிவு ஏற்பட்டதால் சுற்றியுள்ள கிராமங்களில் வசித்த பொதுமக்களுக்கு திடீர் மூச்சுத் திணறல், வாந்தி மாயக்கம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட 83 பேர் கடலூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதனால் அப்பகுதியில் பதட்டமும் பீதியும் நிலவியது. மக்கள் நடமாட்டம் குறைந்தது. அச்சாலை வழியாக போகவே மக்கள் அஞ்சினர். தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீச்சியடித்ததால் பாதிப்பு கூடுதலானது.சம்பவ இடத்திற்கு கலெக்டர் விரைந்து வந்து மக்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார். கம்பெனியில் செல்ல "பாதுகாப்பு சூட்' எடுத்து வருமாறு கலெக்டர் கேட்டபோதுதான் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாதது வெளிச்சத்துக்கு வந்தது.இதேப்போன்று கடந்த 2004ம் ஆண்டு சாஷன் கெமிக்கல்சில் பாய்லர் வெடித்து ஒருவர் இறந்தார். கடந்த 2006ம் ஆண்டு டாக்ரோஸ் கம்பெனியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.இதுதவிர லாயல் சூப்பர் கம்பெனியில் தீ விபத்து, கேலாக் கம்பெனியில் விபத்து என பட்டியலிடலாம். ஆபத்தான ரசாயன தொழிற்சாலைகளில் பாதுகாப்பு பயிற்சிகள் எல்லாம் சம்பிரதாயத்திற்காக நடத்துவதால் ஆபத்து நேரத்தில் எந்தளவு உதவ முடியும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.கடலூர் சிப்காட்டில் இருக்கும் பல தொழிற்சாலைகள் அனுமதி பெற்று தயார் செய்யும் பொருட்களை விட அனுமதி பெறாமல் தயார் செய்யும் ரசாயனம் நிறையவே உள்ளது. அதற்கு உதாரணமாக சாஷன் கம்பெனியில் புரோமின் வைத்திருக்க எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மீண்டும் ஒரு போபால் உருவாகாமல் இருக்க அதிகாரிகள் விரைந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தால்தான் கடலூர் மக்கள் பிழைப்பார்கள்.Source: dinamalar
No comments:
Post a Comment