புதுடெல்லி,ஜன.29:ஹஜ் புனித பயணிகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது அல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஹஜ் பயணத்துக்கு அளிக்கப்படும் மானியம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி.பிரஃபுல் கொராடியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.ஹஜ் மானியம் அளிப்பது என்பது, சமத்துவத்தை வலியுறுத்தும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 14, பாரபட்சமற்ற தன்மையை வலியுறுத்தும் பிரிவு 15-பி, ஒரு குறிப்பிட்ட மதத்தின் வளர்ச்சிக்கு பொது வரிப் பணத்தை பயன்படுத்தாமல் இருப்பதை வலியுறுத்தும் பிரிவு 27 ஆகியவற்றுக்கு எதிரானது என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் வரியில் ஒரு சிறிய பகுதியை மதம் தொடர்பான பணிகளுக்குப் பயன்படுத்துவது என்பது பிரிவு 27-க்கு விரோதமானதல்ல. ஒருவேளை, வசூலிக்கும் வரியில் 25 சதவீதம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுமானால் அது பிரிவு 27-க்கு விரோதமானது.இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளன. கும்ப மேளாவுக்கும், சீனாவில் உள்ள மானசரோவருக்கு ஹிந்துக்கள் யாத்திரை மேற்கொள்வதற்கும் இதுபோன்ற செலவுகள் செய்யப்படுகின்றன என பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.எனவே, மற்ற மதங்களுக்கும் அரசு உதவிகள் செய்யப்படுவதால் பிரிவு 14, 15-பி ஆகியவையும் மீறப்படவில்லை.
1947-ல் நாடு பிரிக்கப்பட்டபோது, பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடு என்று அறிவித்துக் கொண்டது. இந்தியாவை ஹிந்து நாடு என்று அறிவிக்க கடும் நெருக்குதல் அப்போதிருந்த தலைமைக்கு அளிக்கப்பட்டது.
எனினும், பண்டித ஜவாஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் அந்த நெருக்குதல்களுக்குப் பணியாமல் இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக அறிவித்தனர் என்று குறிப்பிட்டு பிரஃபுல் கொராடியாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
No comments:
Post a Comment