சிதம்பரம் நகரில் இரவு நேரங்களில் திறந்திருக்கும் ஹோட்டல்களால் திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளன.
சிதம்பரம் நகரில் இரவு 12 மணி வரை சில சைவ மற்றும் அசைவ ஹோட்டல்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு தமிழக அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை இரவு 10 மணிக்கு மூட உத்தரவிட்டுள்ளது. ஆனால் சிதம்பரத்தில் சைவ மற்றும் அசைவ ஹோட்டல்கள், டீக்கடைகள், சாலையோர கடைகளை இரவு 12 மணி வரை திறந்து வைத்திருப்பதால் குடிகாரர்கள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.
திருட்டுக் குற்றங்களில் ஈடுபவர்கள் ஹோட்டல்களை காரணம் காட்டி இரவுப் பொழுதைக் கழித்து இரவு 1 மணிக்கு மேல் 4 மணிக்குள்ளாக வீடு புகுந்து கொள்ளைடித்துச் செல்கின்றனர். ஹோட்டல்கள் திறந்திருப்பதால் இரவு ரோந்து செல்லும் போலீஸôருக்கு யார் நல்லவர்கள், யார் திருடர்கள் என்பதை அடையாளம் காண முடிவதில்லை.
சமீபத்தில் நகரின் மையப் பகுதியான கமலீஸ்வரன் கோயில் தெருவில் உள்ள ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 19 பவுன் நகைகள் கொள்ளை போயின என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இருசக்கர வாகனங்கள் திருட்டு, வீடு புகுந்து திருடுவது, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் சிதம்பரம் பகுதியில் அதிகரித்துள்ளன.
எனவே பஸ் நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட டீக்கடைளைத் தவிர மற்ற பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளை இரவு 11 மணிக்குள் மூட வேண்டும் என போலீஸôர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment