Islamic Widget

September 11, 2010

ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்

புதுடில்லி : வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு, இலவச சமையல் காஸ் இணைப்பு (எல்.பி.ஜி.,) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. அடுத்த மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று, திட்டத்தை துவக்க திட்டமிட்டிருக்கிறது. மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு பதவியேற்றதும், கடந்த முறை வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி ஆகியவை அமல்படுத்தப்பட்டன.



2009ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐ.மு.கூட்டணி, தேர்தல் அறிக்கையில் கவர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தது. இந்த திட்டத்தை தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.
தற்போது இத்திட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், அடுத்த மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று திட்டத்தை துவக்க யோசனை தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி ஆண்டுதோறும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் 35 லட்சம் குடும்பங்களுக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படும். சமையல் காஸ் இணைப்பு பெற இப்போது நுகர்வோர், ஒரு சிலிண்டருக்கு 1,250 ரூபாய் டிபாசிட் தொகையும், ரெகுலேட்டருக்கு ரூ.150ம் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது ஒரு குடும்பத்திற்கு செலவாகும் 1,400 ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்கும். இந்த வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.490 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த திட்டம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மூலம் செயல்படுத்தப்படும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும் இதற்கான பணிகளை எண்ணெய் நிறுவனங்கள் துவக்கும். சமையல் காஸ் பயன்பாட்டை (எல்.பி.ஜி.,) வரும் 2015ம் ஆண்டுக்குள் 16 கோடி எண்ணிக்கையாக அதிகரிக்க வேண்டும் என, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
மரக்கட்டைகளை எரித்தல் போன்ற சுற்றுச்சூழல் பாதிப்பு எரிசக்திக்கு பதிலாக "கிளீன் ப்யூயல்' என்ற அடிப்படையில் இத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த வகையில், இன்னும் ஐந்தாண்டுகளில் மொத்தம் ஐந்தரை கோடி சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப் பட உள்ளன. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, மண்ணெண்ணெய் மற்றும் விறகுகள் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை தூய்மைபடுத்துவதற்கும் வழி ஏற்படும்.
இதற்காக ஆண்டுக்கு ஒரு கோடி காஸ் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், இலவசமாக வழங்கப்படும் 35 லட்சம் காஸ் இணைப்புகளும் அடங்கும். இத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முன்னோடி மாநிலமாக திகழும் தமிழக அரசு, இலவச சமையல் காஸ் இணைப்புடன், காஸ் அடுப்பையும் இலவசமாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment