Islamic Widget

October 01, 2010

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்



லக்னோ : ""அயோத்தி வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம். எந்த வகையிலும் சரணடைந்து விட மாட்டோம்,'' என சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது.


இந்த தீர்ப்பு குறித்து சன்னி வக்பு வாரியத்தின் வக்கீல் ஜாபர்யாப் ஜிலானி கூறியதாவது: "அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து வழங்க வேண்டும்' என, அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம். "நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும்' என, ஐகோர்ட் தெரிவித்த பார்முலாவை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக் கொள்ளாது. ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம். நிலம் விஷயத்தில் சரணடைந்து விட மாட்டோம். அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன்வந்தால், அதற்கும் சன்னி வக்பு வாரியம் தயாராக உள்ளது. பேச்சுவார்த்தைக்கு யாராவது முன்மொழிந்தால், அது நடக்கும். அடுத்த 90 நாட்களுக்கு தற்போதைய நிலை தொடரும் என்பதால், தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய சன்னி வக்பு வாரியத்திற்கு கால அவகாசம் உள்ளது.


அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் கூட்டத்திற்குப் பின், அப்பீல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு செயல்பட மாட்டோம். மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடில்லை. பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க இன்னும் வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய தீர்ப்பு எங்களுக்கு அதிருப்தி அளிப்பதோடு மட்டுமின்றி, முஸ்லிம்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட ஆதாரங்களுக்கு எதிராகவும் உள்ளது. தற்போதைய நிலையில் இதை மட்டுமே தெரிவிக்க முடியும். தீர்ப்பை முழுமையாக படித்த பின்னரே மற்ற விவரங்களை தெரிவிப்போம். தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்ல முடியும் என்பதால், மக்கள் அதிருப்தி அடைய வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கை இழக்க எந்தக் காரணமும் இல்லை. தற்போதைய பிரச்னையை யாரும் வீதிக்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள். நாடு முழுவதும் அமைதி பேணிக்காக்கப்படும் என, நம்புகிறேன். இவ்வாறு ஜாபர்யாப் ஜிலானி கூறினார்.

No comments:

Post a Comment