Islamic Widget

October 02, 2010

என்னைப் பொறுத்தவரை மசூதி இடிப்பு என்பது சட்ட விரோத நடவடிக்கை தான் ப.சிதம்பரம்

                                       


"அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை பெஞ்ச், அயோத்தி விஷயத்தில் தனது தீர்ப்பைத் தான் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடியது அல்ல. மூன்று மாதங்களுக்கு தற்போதுள்ள நிலைமையே நீடிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது. இப்பிரச்னை, சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல்முறையீடு செய்யப்பட வாய்ப்புள்ளது. அங்கு அளிக்கப்படும் இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த, எல்லாவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதுவரை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் எல்லாம் அயோத்தி விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசு கூறியுள்ளது.


அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் குறித்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று டில்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:அயோத்தி விவகாரம் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை பெஞ்ச் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் விவரங்களை, வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதில் பாதிக்கப்படுவதாக நினைக்கும் தரப்பினர், சுப்ரீம் கோர்ட்டிற்கு மேல்முறையீடு செய்யப் போகின்றனர் என்பது பரவலாக அனைவரும் அறிந்த ஒன்றே.இப்போது அளிக்கப்பட்ட தீர்ப்பில், தற்போது உள்ள நிலைமைகளே அடுத்த மூன்று மாதங்களுக்கும் நீடிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த மூன்று மாதங்களில் மேல்முறையீடு குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, இப்போது அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு என்பது உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடியது அல்ல. மூன்று மாத கால இடைவெளி உள்ளது.இப்போது மத்திய அரசிற்கு உள்ள கடமை என்னவெனில், 1990களில் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின்படி, தற்போது இருக்கும் இதே சூழ்நிலைகளே நீடிப்பதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது மட்டுமே.பாதிக்கப்பட்ட தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் போது, அங்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட அதிக வாய்ப்பும் உள்ளது. அப்போது, சுப்ரீம் கோர்ட் என்ன இடைக்கால உத்தரவை அளிக்கிறதோ அதை மத்திய அரசு நடைமுறைப்படுத்தும்.

கண்ணியம் காத்தனர்: லக்னோ பெஞ்சின் தீர்ப்புக்கு பிறகு, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டு மக்கள் காட்டிய அமைதியும், ஒத்துழைப்பும் மிகவும் வரவேற்கத்தக்கது. மிகுந்த கண்ணியத்துடன் பொதுமக்கள் நடந்து கொண்டுள்ளனர். இதுவரை எந்தவொரு இடத்திலும் சிறியதொரு பிரச்னையும் வரவில்லை.1992ம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்துவது போலவும், அதில் ஈடுபட்டவர்களை காப்பாற்றுவது போலவும் இந்த தீர்ப்பு இருப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது. தீர்ப்பின் எந்த இடத்திலும் நீதிபதிகள் அவ்வாறு கூறவில்லை. மசூதி இடிப்பு சம்பவத்தை லிபரான் கமிஷன் ஆராய்ந்தது. என்னைப் பொறுத்தவரை மசூதி இடிப்பு என்பது சட்ட விரோத நடவடிக்கை.அயோத்தி விவகாரத்தை அதிக நேரம் காட்டுவதையும், இது பற்றிய விவாதங்களை நடத்திக் கொண்டிருப்பதையும் தொலைக்காட்சிகள் கைவிட வேண்டும். பத்திரிகைகளும் அயோத்தி விவகாரத்திற்கு நிறைய இடம் ஒதுக்கி செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். அடுத்த மூன்று மாதங்களுக்கு மீடியாக்கள் இதை செய்தால், அது நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய புண்ணியம்.

அயோத்தி பிரச்னையை விட்டு விட்டு, பிற முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தினால் நல்லது. காமன்வெல்த் போட்டிகள் நடக்க இருக்கின்றன. அந்த போட்டிகள் குறித்து செய்திகள் வெளியிட்டு, மக்களை சந்தோஷப்படுத்தினால் நலமாக இருக்கும்.சர்ச்சைக்குரிய இடத்தையும் சட்டம் ஒழுங்கையும் மத்திய அரசு தான் பாதுகாக்க வேண்டும் என்று உ.பி., மாநில முதல்வர் மாயாவதி கூறியுள்ளார். மத்திய அரசு அளித்த படைகளின் உதவியால் தான், அவர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி இருக்கிறார். எது எப்படியோ, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டால் எனக்கு மகிழ்ச்சி தான்.ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்ட வேண்டுமென பா.ஜ., கூறுகிறது. ஆனால், அனைவருமே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை காத்திருப்பது நல்லது. ஏற்கனவே 52 கம்பெனிகள் மத்தியப் படை உ.பி.,க்கு அனுப்பப்பட்டுள்ளது.தவிர, இந்திய விமானப்படையும் தயார் நிலையில் உள்ளது. எந்தவொரு அசம்பாவித சம்பவம் நடைபெற்றாலும் கூட, அடுத்த 15வது நிமிடத்தில் அந்த இடத்தை ராணுவம் அடையும் வகையில் நிலைமைகள் தயாராக உள்ளன.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

No comments:

Post a Comment