Islamic Widget

September 17, 2010

மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகள் இன்று இயங்குமா? மூடினால் அரசு நடவடிக்கை

சென்னை : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் தனியார் பள்ளி தீ வைத்து எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மெட்ரிக் பள்ளி சங்கங்கள் இன்று ஒருநாள் மாநிலம் முழுவதும் பள்ளிகளை மூட அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், "எக்காரணம் கொண்டும், பள்ளிகளை மூடக் கூடாது. மீறி மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மெட்ரிக் பள்ளி இயக்குனர் தேவராஜன் எச்சரித்துள்ளார்.


போச்சம்பள்ளியில் சில தினங்களுக்கு முன், அண்ணா அறிவகம் பள்ளி பஸ் மோதி, பிளஸ் 1 மாணவர் சுரேஷ் என்பவர் இறந்து விட்டார். இதனால், பொதுமக்கள் ஆவேசம் அடைந்து, பள்ளிக்கு தீ வைத்தனர். பள்ளியில் இருந்த பல பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வுழங்கக் கோரியும், நர்சரி, பிரைமரி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, தனியார் பள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளாவதை தடுத்து நிறுத்தக் கோரியும், தனியார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 17ம் தேதி (இன்று) ஒரு நாள் மாநிலம் முழுவதும் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் மூடப்படும் என, கூட்டமைப்பின் பொதுச்செயலர் நந்தகுமார் அறிவித்தார். அதனால், இன்று பள்ளிகள் இயங்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.







இது குறித்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: கோரிக்கைகள் இருந்தால், அது குறித்து எழுத்துப்பூர்வமாக மனு தர வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அதன்பின் அவர்கள் ஏதாவது ஒரு முடிவுக்கு வரலாம். எதுவுமே செய்யாமல், அவர்களாகவே தன்னிச்சையாக ஒரு முடிவை எடுத்து, நாளை (இன்று) பள்ளிகளை மூடுவோம் என அறிவித்திருப்பது சரியல்ல. இது தொடர்பாக, எங்களுக்கு எந்தவிதமான தகவலையும் தரவில்லை. மாணவர்களின் கல்வி பாதிக்கும் வகையில், எந்தவிதமான செயல்களிலும் தனியார் பள்ளிகள் ஈடுபடக் கூடாது. மீறி, பள்ளிகளை மூடினால், சம்பந்தபட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இயக்குனர் கூறினார்.







பள்ளிகளை மூடும் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என, தமிழ்நாடு பிரைமரி, நர்சரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சங்க நிர்வாகிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 23 சங்கங்கள் ஒருங்கிணைந்த இந்த அமைப்பின் தலைவர் கிறிஸ்துதாஸ் கூறியதாவது: போச்சம்பள்ளி பள்ளியை தீ வைத்து எரித்து, பொருட்களை நாசப்படுத்தியதில் பெற்றோர்கள் அல்லாதவர்கள் தான் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற சம்பவம், பிற பள்ளிகளுக்கு ஏற்படாதவாறு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதே நேரத்தில், தற்போது காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளிகளை திடீரென மூடுவது சரியல்ல. பள்ளிகளை மூடினால், மாணவர்களின் தேர்வுகள் பாதிக்கப்படும். இதனால், பல்வேறு குழப்பங்களும் ஏற்படும். எனவே, பிரச்னைக்கு உரிய முறையில் தீர்வு காண வேண்டும். அதற்காக, பள்ளிகளை மூடக் கூடாது. இந்தப் போராட்டத்தில் எங்களது அமைப்பு கலந்து கொள்ளாது. இவ்வாறு கிறிஸ்துதாஸ் கூறினார்.







மாநிலம் முழுவதும் இன்று தனியார் பள்ளிகள் அனைத்தும் இயங்குகின்றனவா என்பதை கண்காணிக்குமாறு, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டிருந்தால், அது குறித்த விவரங்களை உடனடியாக இயக்குனரகத்திற்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போராட்டத்தில் தனியார் பள்ளிகள் பங்கேற்றால், நோட்டீஸ் அனுப்பி, அதன்பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மெட்ரிக் பள்ளி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment