Islamic Widget

August 29, 2010

காவி பயங்கரவாதம்' பற்றிய பேச்சு மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்

மாநில தலைமை போலீஸ் அதிகாரிகள் மாநாடு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்ட `காவி பயங்கரவாதம்' என்னும் வார்த்தையை பயன்படுத்தினார்.




இதற்கு பா.ஜனதா, சிவசேனா மற்றும் இந்து மத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாராளுமன்றத்திலும் இந்த சர்ச்சை எதிரொலித்தது. அப்போது ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் பேட்டி அளித்த பா.ஜனதா எம்.பி. பல்வீர்பஞ்ச், ப.சிதம்பரம் பதவி விலக முன்வரவேண்டும் அல்லது பிரதமர் மன்மோகன்சிங் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்.



அவர் மேலும் கூறுகையில், "தியாகத்தின் அடையாளமாக கருதப்படும் காவி நிறத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பேசி இருப்பது இந்து மதத்துக்கு அவமதிப்பாகும். இதற்காக ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை மந்திரியின் இந்த பேச்சு ஓட்டுவங்கி அரசியலுக்கான மிக மோசமான உதாரணமாக அமைந்துவிட்டதாக'' குற்றம் சாட்டினார்.



ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி சற்று இறங்கி வந்து விளக்கம் அளித்து இருந்தார். அதில், "தீவிரவாதத்துக்கு எந்தவித நிறமும் கிடையாது. பயங்கரவாதத்தின் ஒரே நிறம், கறுப்புதான்'' என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.



அவருடைய விளக்கத்துக்கு பின்னும் சர்ச்சையை கைவிட மறுத்த பா.ஜனதா கூட்டணி கட்சிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மத அமைப்புகள் ப.சிதம்பரத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகின்றன.



ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி வற்புறுத்தி இருக்கிறார். அதே நேரத்தில், லாலுபிரசாத் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் போன்ற தலைவர்கள் ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

1 comment:

  1. `காவி பயங்கரவாதம்' தான்
    ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு நானும் ஆதரவு தெரிவிகின்றேன்

    ReplyDelete