Islamic Widget

August 31, 2010

நாடாளுமன்றத்தில் பாஜக அமளி: குஜராத் போலீஸ் அதிகாரிக்கு சி.பி.ஐ. நெருக்கடியா?

கீதா ஜோஹ்ரி
புது தில்லி, ஆக. 30: சிபிஐ தனக்கு நெருக்கடி கொடுத்ததாக பெண் போலீஸ் அதிகாரி கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பாஜக அமளியில் ஈடுபட்டது.
÷குஜராத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி கீதா ஜோஹ்ரி. இவர், சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பான விசாரணையில் சில முக்கிய அரசியல் தலைவர்கள் பெயரைக் கூறுமாறு சி.பி.ஐ. தன்னிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்திருந்தார்.
÷இந்தப் பிரச்னை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கள்கிழமை எதிரொலித்தது. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் இந்தப் பிரச்னையை எழுப்பிப் பேசியது:
÷மத்திய அரசு சி.பி.ஐ.-யை தவறாகப் பயன்படுத்துகிறது. குறுகிய அரசியல் லாபத்துக்காக சிலரை வேண்டுமென்றே வழக்குகளில் சிக்கவைக்க முயற்சி நடக்கிறது என்பதையே இது காட்டுகிறது. பெண் போலீஸ் அதிகாரி கீதா, சிபிஐ-க்கு எதிராகக் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு என்ன பதில் அளிக்கவுள்ளது என்றார்.
÷தொடர்ந்து பேசிய அவர், சி.பி.ஐ.-யின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்காமல் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடித்துவிடக் கூடாது. எனவே நாடாளுமன்ற கூட்டத்தை திட்டமிட்டுள்ளதை விட மேலும் சில நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றார்.
÷அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குரல் எழுப்பினர். பதிலுக்கு பாஜக உறுப்பினர்களும் கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
÷அப்போது, சுஷ்மாவின் குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பி.கே. பன்சால், "இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. சிபிஐ-யின் செயல்பாடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்கத் தேவையில்லை. சிபிஐ-யை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தியது இல்லை; இனிமேலும் அதுபோன்று நடைபெறாது. சிபிஐ என்பது தனி அமைப்பு' என்றார்.
÷அமைச்சரின் பதிலால் திருப்தி அடையாத பாஜக எம்.பி.க்கள் தொடர்ந்து மத்திய அரசைக் கண்டித்து குரல் எழுப்பினர். இதனால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவையில்... மாநிலங்களவையிலும் திங்கள்கிழமை இதே பிரச்னை எதிரொலித்தது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, பெண் போலீஸ் அதிகாரி கீதா ஜோஹ்ரிக்கு சி.பி.ஐ. நெருக்கடி கொடுத்த விஷயம் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
÷அப்போது, நீதிமன்றத்தில் உள்ள பிரச்னை குறித்து பேசக் கூடாது என்று மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறினார்.
÷நான் நீதிமன்ற வழக்கு குறித்துப் பேசவில்லை. பெண் போலீஸ் அதிகாரி கூறியுள்ள விஷயம் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகள் பற்றிப் பேசுகிறேன் என்று அருண் ஜேட்லி கூறினார்.
÷இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரித்விராஜ் சவாண், சி.பி.ஐ.-யின் செயல்பாடுகள் குறித்து பதிலளிக்க மத்திய அரசு தயாராகவே உள்ளது. ஆனால் சி.பி.ஐ. மீதான குற்றச்சாட்டு முழுவதும் உண்மையல்ல என்றார்.
÷அமைச்சரின் பதிலால் திருப்தியடையாத பாஜக எம்.பி.க்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர். இதனால் மாநிலங்களவையும் பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
 
 Source:Dinamani

No comments:

Post a Comment