வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. தருமபுரி, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது.
மழை விவரம்: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): சோழவரம் 40, சென்னை பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், கொரட்டூர் 30, சின்ன கல்லார், சத்தியமங்கலம், நடுவட்டம் 30, கொள்ளிடம், சீர்காழி, வேதாரண்யம், ஏற்காடு, வால்பாறை, கோபிச்செட்டிப்பாளையம் 10.
தொடர் மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைய வாய்ப்பிருப்பதால் சென்னை உள்பட தமிழகம், புதுவையில் உள்ள கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் எனவும், வட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment