Islamic Widget

May 29, 2012

அனல்மின் நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்


பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அமைய உள்ள தனியார் நிறுவன மின்நிலையக் கட்டுமானப் பணிகளை உடனே நிறுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் தனியார் நிறுவனத்தின் அனல்மின் நிலையக் கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. இந்த தொழிற்சாலையால் அப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் இந்தத் தொழிற்சாலை நிர்வாகம் இந்த பகுதியில் விவசாயிகளது நிலங்களை அடிமாட்டு விலைக்கு ஏமாற்றி வாங்கியதுடன் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் மீனவ மக்களது வாழ்வாதாரத்தை நாசப்படுத்தியுள்ளது. மேலும் அரசு புறம்போக்கு நிலங்களை சாகுபடி செய்துவரும் விவசாயிகளை மிரட்டி அந்த நிலங்களை கட்டாயமாக ஆக்கிரமித்து வருகிறது. ராட்சத ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து ஏராளமான நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டும் குறைந்து, கடல்நீர் உள்புகுந்து அனைத்தும் உப்புநீராக மாறி குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 ஏற்கெனவே இந்த தொழிற்சாலையால் ஏற்படும் ஆபத்தான நிலைமை குறித்து சட்டமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன். தற்போது உச்ச நீதிமன்றத்தின் கிளையான தேசிய பசுமை ஆணையம் மேற்கண்ட தொழிற்சாலைக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள சுற்றுப்புறச் சூழல் ஒப்புதலை நிறுத்திவைத்துள்ளது. அத்துடன் மேற்கண்ட ஆணையம் பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள சிறப்புவாய்ந்த அலையாத்தி காடுகளுக்கு இந்த தொழிற்சாலை மற்றும் அங்கு அமைய உள்ள பல்வேறு தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த முழுமையான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுப்புறச்சூழல் ஒப்புதல் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை முழுமையாக நிறுத்திட வேண்டும். இதை மீறி கட்டுமானப் பணிகள் தொடருவது உச்ச நீதிமன்ற தீர்ப்பை சட்டவிரோதமாக மீறுவதாகும் என்றார்.

No comments:

Post a Comment