Islamic Widget

August 07, 2010

18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது


சென்னை: "பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால், வாகனத்தின் உரிமையாளரை கைது செய்வதுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்' என, சென்னை போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை போக்குவரத்து காவல்துறை நடப்பாண்டில் போக்குவரத்து விதிகளை மீறும் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் டூவீலர் ஓட்டிகள், குடிபோதை மற்றும் மொபைல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் விளைவாக இந்தாண்டில் கடந்த 5ம் தேதி வரையில் போக்குவரத்து விதி மீறல் வழக்குளில் பலர் சிக்கியுள்ளனர்.

இவர்களிடமிருந்து அபராதத் தொகையாக 5 கோடியே 11 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான நபர்களை ஏற்றிச் செல்லுதல், அதிக கட்டணம் வசூலித்தல், மீட்டர் போடாமல், சீருடை அணியாமல் ஓட்டுதல் என பல விதிமீறல்களில் ஈடுபட்ட, ஆட்டோ ஓட்டுனர்கள் மீது ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 716 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 6,856 வழக்குகள் பதியப்பட்டு, 89 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 651 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.

மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டியதாக 1,199 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது தவிர, நிறுத்தக் கோட்டை தாண்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் ஆகிய விதிமீறல்கள் மீது போக்குவரத்து போலீசார் தனிக் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது 18 வயதிற்கும் குறைவான பலர் வாகனங்களை ஓட்டி போலீசாரிடம் சிக்குவது வழக்கமாகி வருகிறது. இதனால் வாகன விபத்துகள் அதிகரிக்கிறது. 18 வயதிற்குட்பட்ட நபர்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமையாளரை கைது செய்வதுடன் அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படும். மேலும், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment