Islamic Widget

August 08, 2010

மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது?


மொபைல்களில் தேவையற்ற அழைப்பு, எஸ்.எம்.எஸ்.,களால் தூக்கம் தொலைப்பதுடன், பணமும் விரயமாவது வாடிக்கையாகிறது. மத்திய நிதித்துறை அமைச்சரை எரிச்சலடையச் செய்த தேவையற்ற அழைப்பால் இவற்றுக்கு தடையை ஏற்படுத்த அரசு முயன்று வருகிறது.
பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல் என அத்தனை மொபல்களிலும் தினமும் தேவையற்ற பல எஸ்.எம்.எஸ்., அழைப்பு, பதிவு செய்யப்பட்ட பேச்சு வாடிக்கையாளருக்கு தொல்லை கொடுக்கிறது.வங்கி கடன், கல்லூரியில் இடம் வாங்கித்தருதல், வாகன விற்பனை, நிலம், வீடு வாங்குதல், பங்குதாரராகுங்கள், ராசிபலனை கணித்தல், பழைய வாகனம், பொருட்கள் விற்பனை என பதிவு செய்யப்பட்ட மற்றும் நேரடி அழைப்புக்கள் தொடர்கிறது.இவை நாம் விரும்பாமல், நமது மொபைலுக்குள் வந்து செல்கிறது. இதை நிறுத்திக் கொள்ள அத்தனை மொபைல் நிறுவனங்களிலும் பிரிப்பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டுகளுக்கு தனித்தனி எண்கள் கொண்ட சேவை மையம் வைத்துள்ளனர். உதாரணமாக 121, 14541, 200 என வைத்து அதற்கு எஸ்.எம்.எஸ்., மூலம், ""DONOT DISTURB'' என, டைப் செய்து அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பியதும் நமக்கு அவர்களிடம் இருந்து வரும் பதிலில், "உங்கள் வேண்டுகோள் ஏற்கப்படுகிறது. 45 நாட்களுக்குள் அனைத்து சேவை குறுந்தகவல், அழைப்பும் நிறுத்தப்படும்' என, குறிப்பிடுகின்றனர்.
ஆனாலும், அவை நிறுத்தப்படுவதில்லை. இதுபற்றி, ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., போன்ற நிறுவனத்திடம், "45 நாட்களுக்குப்பின்னும் தேவையற்ற எஸ்.எம்.எஸ்., அழைப்புவருகிறது' என்றால், "எங்கள் நிறுவன விதிகளுக்கு உட்பட்ட எஸ்.எம்.எஸ்., மற்றும் அழைப்புக்களை மட்டுமே நிறுத்த முடியும். உங்கள் எண்ணை அறிந்து ஏதாவது நிறுவனம் அனுப்பும் எஸ்.எம்.எஸ்., அழைப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல' என, பொறுப்பாக பதில் கூறுகின்றனர். ஆனாலும், 45 நாட்களுக்குப்பின்னும், ""AT SERVICE, FM SERVICE, eCASH, AT FROM'என, பல பெயரில் மொபைல் நிறுவனம் மூலம் எஸ்.எம்.எஸ்.,களும், குறிப்பிட்ட எண்களில் இருந்து அழைப்புக்களும் வந்தமயமாக உள்ளது.நேரடியாக, "கங்கிராஜூலேஷன், நீங்கள் எங்கள் ஹலோ டியூன், கிரிக்கெட் பேக், ஜோக் பேக் வாடிக்கையாளர் ஆனதற்கு நன்றி' என்று எஸ்.எம்.எஸ்., வருவதுடன் குறைந்தது 10 முதல் 30 ரூபாய் வரை பிடித்தமும் செய்கின்றனர். இப்பணத்தை திரும்பப்பெற எந்த வழிமுறைகளும் இல்லை என்பது வேதனைக்குரியது.
பதிவு செய்யப்பட்ட பல, "ஆஃபர்' குறித்த ஃபோன் அழைப்புக்களை நாம் துண்டித்தால், அல்லது அந்த அழைப்பை நாம் அறிந்து ஆன் செய்யாமல் தவிர்த்தால் கூட மீண்டும், மீண்டும் வருவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜிக்கு வந்த அழைப்பால் நாடு முழுவதும் இப்பிரச்னை பிரதிபலித்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.நேற்று மாலை 7 மணிக்கு ஏர்டெல் நிறுவனத்தின் சேவைமைய அதிகாரியிடம் பேசி, "45 நாட்கள் காத்திருக்காமல் தொல்லையாக வரும் அழைப்பு, எஸ்.எம்.எஸ்.,களை நிறுத்த வேறு வழி, புதிய அணுகுமுறை ஏதும் தங்கள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதா?' என கேட்டதற்கு, "டோண்ட் டிஸ்டர்ப்' என்ற பழைய முறை, 45 நாள் காத்திருப்பு மட்டுமே வழி' என்றனர்.
கூகுள் இணைய தளத்தில், அத்தனை மொபைல் நிறுவனங்களும் "டோண்ட் டிஸ்டர்ப்' விலாசம் வைத்து நமக்கான தேவையற்ற அழைப்பை நிறுத்த பதிவு செய்யும்படி கூறுகின்றனர். ஆனாலும், பலனின்றி தவிப்பது வாடிக்கையாளரின் வேதனையாகும்.மத்திய அரசு இதற்கான உடனடி தடையை ஏற்படுத்துவதுடன், அதுபோன்ற அழைப்பு வந்தால் அந்நிறுவனம் தவிர்த்து யாரிடம் புகார் செய்யலாம் என்பதையும் தெளிவாக அறிவிக்க வேண்டும்.இது ஒவ்வொரு மொபைல் ஃபோன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும் கூட.

No comments:

Post a Comment