Islamic Widget

October 12, 2010

மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு

சென்னை : அனைத்து மருந்துக் கடைகளிலும் குளிர்சாதன வசதி செய்ய வேண்டுமென தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.தமிழகத்தில் மருந்து விற்பனையை முறைப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுக்கிறது. போலி மற்றும் காலாவதி மருந்து பிரச்னைக்குப் பிறகு, அனைத்து மருந்துக் கடைகள் மற்றும் மருந்து கம்பெனிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.


தமிழகத்திலுள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்துக் கடைகளுக்கு, மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் பல நிபந்தனைகளை விதித்துள்ளனர்.ஒவ்வொரு கடையிலும் மாதந்தோறும் அதிகாரிகள் ஆய்வு நடத்துவர். அவர்களுக்கு கடை உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மருந்துகளின் இருப்பு, விற்பனை குறித்த பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். டாக்டர் சீட்டு இல்லாமல் தங்கள் விருப்பத்துக்கு மருந்து தரக் கூடாது என, மருந்து கடைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காலாவதியான மருந்துகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
காலாவதியான மருந்துகளை திரும்பப் பெறும் மருந்துக் கம்பெனிகள், அதை முறையாக அழிக்க வேண்டும். எந்தெந்த மருந்துக் கடைகளுக்கு, எந்த மருந்து விற்பனை செய்யப்பட்டது என்ற விவரங்களை, மருந்துக் கம்பெனிகள் ஆவணமாக வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை, மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விதித்துள்ளனர். மருந்துக் கடை உரிமையாளர்கள் விதிகளைச் சரியாக பின்பற்றுகின்றனரா என மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி, சோதனை செய்ய மருந்து ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மருந்துக் கடைகள் அனைத்திலும், குளிர்சாதன வசதி பொருத்தியிருக்க வேண்டும் என மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குனரகம் கண்டிப்பான நிபந்தனை விதித்துள்ளது. இதை அமல்படுத்தாத கடைகளின் உரிமங்களை ரத்து செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் பாஸ்கரன் கூறியதாவது:போலி மருந்து, காலாவதி மருந்து விற்பனை அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகள் மற்றும் கம்பெனிகள், விதிகளை சரியாக கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கிறோம். விதியை மீறிய ஒரு மருந்து கம்பெனியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உரிய வசதிகள் செய்யாத ஒரு ரத்த வங்கியும் மூடப்பட்டுள்ளது. அனைத்து மருந்துக் கடைகளிலும், குளிர்சாதன வசதி பொருத்த உத்தரவிட்டுள்ளோம். இதற்காக பழைய கடைகளுக்கு கால அவகாசம் கொடுத்துள்ளோம். உரிய காலத்திற்குள் "ஏசி' பொருத்தாவிட்டால், கடை உரிமம் மீண்டும் புதுப்பிக்கப்பட மாட்டாது. "ஏசி' இல்லாத கடைகளுக்கு கண்டிப்பாக புது லைசென்ஸ் தரமாட்டோம்."ஏசி' வசதி இருந்தால், மருந்துகள் எளிதில் கெட்டுப் போகாது. இதை கடைக்காரர்கள் புரிந்து கொண்டு தாங்களாகவே, "ஏசி' வசதி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.



Source:  Dinamalar

No comments:

Post a Comment