Islamic Widget

July 03, 2012

வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஏர் இந்தியா விமானிகள் டெல்லி உயர்நீதிமன்றத்திடம் ஒப்புதல்


மத்திய அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகளில் ஒரு பிரிவினர் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தை மத்திய அரசு சட்ட விரோதம் என அறிவித்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 101 விமானிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
விமானிகளுடன் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சமரச முடிவு எட்டப்படவில்லை. இதனால் விமானிகள் உடனடியாக தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறவேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தங்கள் போராட்டத்தை உடனடியாகக் கைவிடப் போவதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் விமானிகள் அனைவரும் பணிக்கு திரும்புவர் எனவும் ஏர் இந்தியா விமானிகளின் வழக்கறிஞர் கீதா லுத்ரா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று உறுதியளித்தார்.

மேலும் வேலைநிறுத்ததில் ஈடுபட்டதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட விமானிகளை மீண்டும் நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர். இதனால் 58-வது நாளாக நீடித்து வந்த போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

விமானிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக ஏர் இந்தியா நிறுவனம், நீதிமன்றத்தில் உறுதி அளித்ததையடுத்து விமானிகள் சங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment