Islamic Widget

May 14, 2012

பரங்கிப்பேட்டை வாலிபர் கொலை வழக்கில் கைது!

அடகு கடை உரிமையாளரின் கழுத்தை அறுத்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில், இலங்கையில் விமான பைலட் பயிற்சி பெற்ற பரங்கிப்பேட்டை இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். பணக்காரனாக ஆசைப்பட்டு கொள்ளையடித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயல் பட்டேல் சாலையில் அடகு கடை நடத்தி வந்தவர் கணேஷ்ராம்,28. இவர், கடந்த மாதம் 14ம் தேதி கடையில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். கொலை சம்பவம் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது.

கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு வீடியோ கேமராவில், கடையில் இருந்த கணேஷ்ராமிடம், கொலையாளி பேசிக் கொண்டிருந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. அதை ஆதாரமாக வைத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
கொலையாளி பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் போலீசார் அறிவித்தனர். இருந்தும் கொலையாளி பற்றிய துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்த சூழ்நிலையில், தென் சென்னை பள்ளிக்கரணை 2வது தெரு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சந்திர பிரபா,60. கடந்த 12ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சந்திர பிரபாவிடம், டிப்டாப் உடையில் சென்ற வாலிபர், "பாட்டி, நான் சுகாதாரத்துறையிருந்து பன்றிக் காய்ச்சல் மாத்திரை கொடுப்பதற்காக கணக்கெடுக்க வந்துள்ளேன். உங்கள் வீட்டில் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரத்தை சொல்லுங்கள்' என்றார். அவர் தனியாக இருப்பதை அறிந்து திடீரென கத்தியை எடுத்து, பாட்டியின் கழுத்தில் வைத்து, அணிந்திருந்த நகைகளை கொடுக்குமாறு மிரட்டினார்.
சத்தம் போட்டதால், அவரது கழுத்தில் கத்தியால் குத்தினார். வீட்டிற்குள் பக்கத்து அறையில் இருந்து அவரது மகள் ராக்கி,27, வேகமாக ஓடி வந்தார். அவரையும் கத்தியால் கீறி மிரட்டினார். அந்த இடைவெளியில் சுதாரித்துக் கொண்ட சந்திர பிரபா, வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தார். சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மடக்கி பிடித்து, பள்ளிக்கரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவரது உருவம், மதுரவாயலில் அடகு கடை உரிமையாளரின் கொலையாளியுடன் ஒத்துப் போனதை உணர்ந்தனர்.
மதுரவாயல் அடகு கடையில் நடந்த கொலை சம்பவத்தின் போது, பதிவாகியிருந்த வீடியோ காட்சியை போலீசார் பார்த்தனர். அந்த வீடியோவில் இருப்பது, செயின் பறிப்பு முயற்சியில் இறங்கிய வாலிபர் தான் என தெரிய வந்தது. இது பற்றிய தகவல் மதுரவாயல் போலீசாருடன் பறிமாறப்பட்டது.
"இலங்கையில் விமான பயிற்சி பெற்றேன்; பணக்காரனாக ஆசைப்பட்டு கொலையாளி ஆனேன்':பகீர் வாக்குமூலம் பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறிக்க முயன்ற வாலிபரிடம் தனிப்படை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது:என் பெயர் ராமஜெயம் என்ற அப்பு,26. சொந்த ஊர், பரங்கிப்பேட்டை நெல்லுக்கடை தெரு. அப்பா பெயர் ஆறுமுகம். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்து முடித்தேன்.சென்னை நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து பிரிவு காவலர் ஜெய்சங்கர் எனது உறவினர். அவரது வீட்டில் கல்லூரிப் படிப்பை முடித்தேன்.
சரியான வேலை அமையவில்லை. பின்னர் இலங்கைக்கு விமான பயிற்சி பெற சென்றேன். அங்கு, 10 மாதம் விமானத்தை ஓட்டுதல் மற்றும் பழுது நீக்குதல் பற்றிய பயிற்சியை பெற்றேன்.இலங்கையில் சிங்கப்பூரை சேர்ந்த டாக்டர் ஜெய், என்பவரது அறிமுகம் கிடைத்தது. குறுகிய நாட்களில் அதிகளவு பணம் சம்பாதிப்பதற்கான வழி முறையை அவரிடம் கேட்டேன். "தமிழகத்தில், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை வாங்கி என்னிடம் கொடுத்தால், அவற்றை வெளிநாடுகளில் விற்று, 20 லட்ச ரூபாயாக கொடுக்கிறேன்' எனக் கூறினார்.
உறவினர் ஜெய்சங்கரிடம் பணம் கேட்டேன். வட்டிக்கு வாங்கி கொடுத்தார். பணத்தை வாங்கிய டாக்டர் திடீரென என்னை ஏமாற்றி விட்டு மலேசியாவிற்கு ஓடி விட்டார். உறவினர், பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். அப்போது மதுரவாயலில் உள்ள எனது நண்பர் பாண்டியன் என்பவரை சந்திக்க, கடந்த மாதம் 13ம் தேதி சென்றேன்.மதுரவாயல் அடகு கடையில் கணேஷ்ராம் தனியாக உட்கார்ந்திருந்தார். கடையில் ஏகப்பட்ட நகைகள் மின்னின. அப்போதே லேசாக பொறி தட்டியது. அன்றைய தினம் கடையை நோட்டம் விட்டேன்.மறுநாள் 14ம் தேதி அடகு கடைக்குச் சென்று கணேஷ்ராமிடம் பேச்சுக் கொடுத்தேன். எனது மொபைல் போனில் உள்ள ஒரு செயினை அவரிடம் காண்பித்து, அதே போன்ற செயின் வேண்டுமென கேட்டேன்.
கடையின் உள்புறத்தில் ஒரு அறைக்கு சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்று, அவரது கழுத்தை அறுத்தேன். அவர் அப்படியே சரிந்தார்.கடையில் இருந்த, 100 சவரன் நகைகளை அள்ளிக் கொண்டு, வெளியேறினேன். உறவினரின் போலீஸ் குடியிருப்புக்கு சென்று, நகையை துணியால் சுற்றி ஒரு இடத்தில் மறைத்து வைத்தேன். சம்பவம் அப்படியே அமுங்கிப் போய் விடும் என, நினைத்திருந்தேன். ஆனால், கணேஷ்ராமுடன் நான் பேசிக் கொண்டிருப்பதைப் போன்ற படங்கள், வெளியிடப்பட்டன.தாடியுடன் அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். அப்போது தான், அடகு கடையில் கேமரா வைக்கப்பட்டிருந்த விவரம் எனக்கு தெரிய வந்தது. அதனால், இரண்டு நாட்கள் வெளியில் தலை காட்டாமல் அடைந்து கிடந்தேன்.
பிறகு, தாடி வைத்து தலையில் தொப்பி வைத்து "கெட்டப்பை' மாற்றினேன். கொள்ளையடித்து வந்த நகைகளை எடுத்துக் கொண்டு அடகு கடை ஒன்றிற்கு சென்று, அது ஒரிஜினலா என சோதித்தேன்.அ வை கவரிங் என தெரிந்தது. 100 சவரன் கவரிங் நகைக்குள் ஆறு சவரன் மட்டுமே தங்க நகைகள் இருந்தன. அந்த நகைகள் ஒரு லட்ச ரூபாய் வரை தான் போகும் என்பதால், கடன் வாங்கிய, 10 லட்சத்தை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில், சென்னை நகரில் பல இடங்களில் சுற்றித் திரிந்து செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டேன்.வாகன நம்பர் பிளேட்டில் "போலீஸ்' என ஒட்டியிருந்ததால், போலீசார் என்னை சந்தேகப்படவில்லை. வேளச்சேரியில் கணக்கெடுப்பது போன்று நடித்து கொள்ளையடிக்க முயன்றேன். பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டேன். குறுகிய காலத்தில் பணக்காரனாக ஆசைப்பட்டு, கொலையாளியாக மாறி விட்டேன்.இவ்வாறு, வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment