பரங்கிப்பேட்டை: தானே தாக்குதலினால் பரங்கிப்பேட்டை நகரில் மின்கம்பங்கள் மற்றும் கம்பிகள் பெருத்த சேதமடைந்தததினால் மின்விநியோகம் முற்றிலும் தடைபட்டது. தற்போது அவை சுமார் 85% சீர் செய்யப்பட்டு ஊரில் பல இடங்களில் மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரின் முக்கிய சாலையான மீராப்பள்ளி தெருவில் இதுவரை மின்விநியோகம் வழங்கப்படவில்லை.
கடந்த 8 நாட்களாக மின்இணைப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர் அத்தெருவாசிகள். அறுந்து கிடக்கும் கம்பிகள், சாய்ந்த கம்பங்கள் அப்படியே உள்ளது. ஊரில் பல இடங்களில் மின் இணைப்பு வழங்கிவிட்ட நிலையில், முக்கிய தெருவாக இருக்கும் எங்களுக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இன்று மாலை 6 மணியளவில் திடீர் சாலை மறியல் செய்தனர் மீராப்பள்ளி தெரு இளைஞர்கள்.
தி.மு.க. 6-வது வார்டு செயலாளர் எம்.எஸ். ஜாபர் தலைமையில் ஒன்றுகூடிய இவர்கள், சாலையின் குறுக்கே மின்கம்பங்களை போட்டு மறியல் செய்தனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்தனர். நகர காவல்துறை ஆய்வாளர் மின்வாரிய துணை பொறியாளருடன் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு விபரம் கேட்டதில், நாளை காலை 8 மணிக்கு மின்வாரிய ஊழியர்கள் மீராப்பள்ளி தெருவில் பிரச்சனை சரி செய்து, மின்விநியோகம் வழங்குவார்கள் என உறுதியளித்தார்.
இதனால், சாலை மறியல் திரும்பப் பெறப்பட்டு போக்குவரத்துக்கு வழிவிடப்பட்டது.
நன்றி:Al Ameen
No comments:
Post a Comment