Islamic Widget

January 12, 2012

மத்திய அரசின் முஸ்லீம்களுக்கு 4.5% உள் ஒதுக்கீட்டுக்கு தேர்தல் ஆணையம் திடீர் தடை



டெல்லி: முஸ்லீம் சமுதாயத்தினருக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து விட்டது. இதனால் உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகுதான் இந்த முடிவை மத்திய அரசு அமல்படுத்த முடியும்.

கடந்த மாதம்தான், இந்த உள் ஒதுக்கீடு குறித்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்து ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள உத்தரவில், அனைத்து மாநில சட்டசபைத் தேர்தல் முடியும் வரை இந்த திட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

உ.பியில் முஸ்லீம் வாக்காளர்கள் கணிசமாக உள்ளனர். இவர்களைக் கவரும் வகையிலேயே இந்த உள் ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்தது என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தன என்பது நினைவிருக்கலாம்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், வாக்கு வங்கி அரசியலை முழுமையாக பயன்படுத்த காங்கிரஸ் முயல்கிறது என்பது இந்த உள் ஒதுக்கீடு முடிவின் மூலம் தெரிகிறது. இதை தேர்தல் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது. சிறுபான்மையினருக்கும், இதர பிற்பபடுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்க மத்திய அரசு மறைமுகமாகத் தூண்டுகிறது என்றார்.

முன்னதாக முஸ்லீம்களுக்கு உள் ஒதுக்கீட்டின் அளவு 9 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று கடந்த வாரம் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியிருந்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால் பாஜகவின் புகார்களை குர்ஷித் மறுத்துள்ளார். முஸ்லீம்களுக்கு உள் ஒதுக்கீடு என்பது காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சமாகும் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment