Islamic Widget

December 09, 2011

பாப்ரி மஸ்ஜித் வழக்கு: தினமும் ஆதாரங்கள், சாட்சிகளை பதிவுச்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

AYODHYA_166804eலக்னோ:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையை அன்றாடம் நடத்த ராய்பரேலி விசாரணை நீதிமன்றத்திற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எட்டு பேரில் ஒருவரான விஷ்ணு ஹரி டால்மியாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடிச் செய்துவிட்டு நீதிபதிகளான சுக்லா, சுரேந்திர விக்ரம்சிங் ராத்தோர் ஆகியோர் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் விசாரணை நடத்துவதை ஒவ்வொரு மாதமும் குறைந்தது 10 தினங்களாக நிச்சயிக்க ராய்பரேலி விசாரணை நீதிமன்றத்திற்கு ராய்பரேலி மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஷ்ணு ஹரி டால்மியா மேல் முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வழக்கை வேகமாக நடத்தி முடிப்பதை உறுதிச்செய்ய விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டியது அவசியம் என கருதுவதாக உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் கூறியது. அரசு தரப்பு சாட்சி நீதிமன்றத்தில் ஆஜரானால் அவரிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையை தீர்ப்பு வெளியாகும் வர தினமும் பதிவுச் செய்யவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவு போட செசன்ஸ் நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்றும், சட்டத்தின் பார்வையில் நீதிபதியின் நடவடிக்கை மோசமானது என்றும் விஷ்ணு ஹரி டால்மியா தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். தொலைவில் இருந்து இந்த வழக்கில் ஆஜராக வரும் எதிர்தரப்பு வழக்கறிஞர்களுக்கு இந்த உத்தரவு சிரமத்தை உருவாக்கும் என அவர் தெரிவித்தார். ஆனால், உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் கூறுகையில், சாட்சிகளுக்கு வாக்குமூலம் அளிக்க ஏதேனும் தினம் அசெளகரியம் ஏற்படும் வரை வழக்கை நீட்டிக்கொண்டு செல்லக்கூடாது என உத்தரவிட்டது.
எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க சிரமம் ஏற்பட்டால் அவர் வேறு ஏதேனும் வழக்கறிஞருக்கு இவ்வழக்கை ஒப்படைத்தது குறித்து உறுதிச்செய்ய வேண்டும். இதன் மூலம் அவர் இல்லாவிட்டாலும் வழக்கு விசாரணைக்கு தடை ஏற்படாது. எப்பொழுது ஒரு சாட்சியை விசாரிப்பது முடிவடைகிறதோ அன்றைய தினமே அடுத்த சாட்சியை விசாரிக்கும் தேதியை நிர்ணயம் செய்யவேண்டும். ஆனால், இந்த தேதி 7 தினங்களுக்கு அதிகமாக கூடாது. சாட்சிகளை உறுதிச்செய்து வழக்கை நீட்டிக்கொண்டு செல்வதை சி.பி.ஐ தடுக்கவேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ டிவிசன் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, சன்னியாசினி ரிதம்பரா, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வினய் கத்தியார் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment