கடலூர் : கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழைக்கு இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். தொற்று நோய் பரவுவதை தடுக்க 63 மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதுள்ளது.
வெள்ள நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அனைத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் தகவல் பெரும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள் ளது. பொதுமக்கள் 04142-231653 என்ற தொலைபேசி மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். சுகாதாரத்துறை துணை இயக்குனர் சம்பத்குமார் தலைமையில் 63 குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவிற்கு மருந்துகள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி பிளீச்சிங் பவுடர் தெளிக்கவும், குடிநீரை குளோரினேஷன் செய்து வினியோகிக்க உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி வடிகட்டி பருக வேண்டும். தயாரித்து 24 மணி நேரத்திற்கு மேலான உணவுகளை உண்ண வேண்டாம்.
வீடுகளின் அருகே தேவையற்ற டயர், உடைந்த பானை, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகளில் மழை நீர் தேங்கி அதில் உருவாகும் கொசுக் களால் காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளதால் வீட்டின் அருகில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment