Islamic Widget

October 07, 2011

சவூதி: பாகிஸ்தானியரிடம் வழிப்பறி – 136,800 ரியால் கொள்ளை

சவூதி கிழக்கு மாகாணத்தில் அத்-தமாம் நகரில் ஹோண்டா வாகன விநியோக நிறுவனத்தில் விற்பனை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவர் 64 வயதான ராஜா அப்துல் சத்தார். இவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 34 ஆண்டுகளாக இந்த ஒரே நிறுவனத்தில் இவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

வயது மூப்பின் காரணமாக, பணி ஓய்வு பெற்ற இவர் கடந்த (06 10 2011) வியாழனன்று நாடு திரும்பத் திட்டமிட்டிருந்தார். அதனால், தனது பணிக்கால தொகுப்பு ஊதியத்தின் ஒரு பகுதியைக் காசோலையாகப் பெற்று அதை வங்கியில் வரைவோலை (DD)யாக மாற்றும் எண்ணத்துடன், கடலோரப் பகுதியிலுள்ள சவூதி அமெரிக்கன் வங்கி(SAMBA)க்குச் சென்றிருக்கிறார்.

அந்த வங்கியில் அவருக்குக் கணக்கு இல்லை என்பதால் வரைவோலை வழங்க இயலாது என்று தெரிவித்த வங்கிப் பணியாளர், தொகையைப் பணமாகப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, சம்மதித்து 500 ரியால் தாள்களாகத் தரும்படி ராஜா அப்துல்சத்தார் கேட்டுக்கொண்டும், அன்றைக்குப் பார்த்து, 500 ரியால் தாள்கள் இருப்பில் இல்லை என்று தெரிவித்த காசாளர், 100 ரியால் தாள்களாக 136,800 ரியால்களை வழங்க, அதைப்பெற்றுக்கொண்டு அதாமா பகுதியில் உள்ள தனது இருப்பிடம் நோக்கி ராஜா அப்துல்சத்தார் விரைந்துள்ளார்.
ஆனால், வழியிலேயே ஒரு வாகனம் தன்னைப் பின் தொடர்வதை அறிந்து, பயந்து, வேகமாக வீடு நோக்கிச் சென்று, வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்க முற்படும்போது, அந்த வாகனத்தில் வந்த நான்கு அரபியர்களில் இருவர், கூர்மையான கத்திகளைக் கொண்டுவந்து இவர் மீது மோதி, பணம் வைத்திருந்த காகிதப்பையைப் பறித்துள்ளனர். சப்தமிட்டுக் கொண்டே, ராஜா போராடியும் பலனின்றி, காகிதப்பை கிழிந்துவிட, அதிலிருந்த பணத்தின் பெரும்பகுதி கொள்ளையர் வசமானது.
திடுக்கிட்டு ராஜா, செய்வதறியாது நிற்கையில், இன்னும் பணம் அவரிடம் மீதமுள்ளதை அறிந்த கொள்ளையர்கள் மீண்டும் வந்து மோதி, மீதமிருந்த பணத்தையும் பறித்துத் தப்பிச் சென்றுள்ளார்கள். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜாவின் கூக்குரலைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் உடனடியாகக் கூடிவிட்டாலும், கொள்ளையர்கள் கையில் கத்தி வைத்திருந்த காரணத்தால், கொள்ளையர்களைப் பிடிக்க யாரும் முற்படவில்லை. எனினும், சம்பவத்திற்குப் பின்னர், சாட்சிகளாக சிலர் முன்வந்து, காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. வங்கியின் கண்காணிப்புப் படக்கருவிப் பதிவை (CCTV) ப் பெற்றுச் சென்று காவல்துறை இவ்வழக்கை ஆராய்ந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

1 comment: