Islamic Widget

April 24, 2011

சீல் வைத்த சாஷன் கம்பெனி மீண்டும் இயங்கியதால் மக்கள் முற்றுகை!

முதுநகர்:"சீல்' வைக்கப்பட்ட தனியார் கெமிக்கல் கம்பெனி மீண்டும் இயங்கியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், முற்றுகையில் ஈடுபட்டனர்.கடலூர் சிப்காட்டில் உள்ள சாஷன் கம்பெனியில் கடந்த மார்ச் 7ம் தேதி இரவு, ஹைட்ரோ புரோமின் காஸ் கசிவு ஏற்பட்டது. இதனால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு 83 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கலெக்டர் சீதாராமன் உத்தரவின் பேரில், சாஷன் கம்பெனிக்கு தொழிற்சாலைகள் ஆய்வாளர் தங்கராஜ், "சீல்' வைத்தார்... இந்நிலையில், சாஷன் கம்பெனி நேற்று இயங்குவதைக் கண்டு ஆத்திரமடைந்த குடிகாடு மற்றும் ஈச்சங்காடு கிராம மக்கள் 100 பேர், நேற்று பகல் 12 மணிக்கு, கம்பெனியை முற்றுகையிட்டனர்.தகவலறிந்த கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஏழுமலை மற்றும் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். போதிய முன்னெச்சரிக்கை இல்லாமல் அஜாக்கிரதையாக கம்பெனி இயங்கியதால் ஏற்பட்ட ரசாயன வாயு கசிவில், பலர் பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாக, "சீல்' வைக்கப்பட்ட கம்பெனி, எந்தவித அறிவிப்பின்றி திடீரென இயங்குவதாகக் கூறினர்.அதற்கு கம்பெனி தரப்பில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கம்பெனியில் ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையை ஏற்று, கம்பெனியை இயக்க நேற்று முன்தினம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளதற்கான உத்தரவு நகலை காண்பித்தனர். இது குறித்து, கடலூர் ஆர்.டி.ஓ., முருகேசன் விசாரித்து முடிவை நாளை (இன்று) அறிவிப்பார் என போலீசார் கூறினர்.

No comments:

Post a Comment