Islamic Widget

December 05, 2010

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழைமக்களின் மாமூல் வாழ்க்கை பாதிப்பு

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூரில் கடந்த 26ம் தேதி பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் கடலூரில் 220 மி.மீ., கொட்டியது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மாவட்ட நிர்வாகம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் செய்து முடிப்பதற்குள் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் தாக்கம் அடங்குவதற்குள் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.அடுத்தடுத்து மூன்று காற்றழுத்தம் காரணமாக தொடர் மழை பெய்து மாவட்டமே வெள்ளக்காடானது. ஒரு வாரத்திற்கும் மேல் தொடர் மழை பெய்துள்ளதால் மக்களின் மாமூல் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி, கடலூர் பகுதிகளில் நடப்பட்டிருந்த 1.5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.பல புதிய நகர்களிலும், பல கிராமங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன.கடந்த வாரம் 16 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ வெங்காயம் நேற்று 26 ரூபாயாக உயர்ந்துள்ளது. கிராமங்களில் சூழ்ந்த தண்ணீர் இதுவரை வடியாமல் உள்ளது.இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில்÷ நற்று சராசரியாக 2 செ.மீ., மழை பதிவானது.கடந்த ஆண்டு டிசம்பர் வரை 100 செ.மீ., மழை பெய்தது. ஆனால் இந்த ஆண்டு 130 செ.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.உபரி நீர் வெளியேற்றம்: நேற்றைய நிலவரப்படி வெள்ளாறிலிருந்து 31 ஆயிரம் கன அடியும், பெலாந்துறையிலிருந்து 4,322 கன அடியும், தொழுதூரிலிருந்து 6,275 கன அடியும், விருத்தாசலத்திலிருந்து 7,749 கனஅடியும், மே.மாத்தூரிலிருந்து 5,980 கன அடியும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.காட்டுமன்னார்கோவில் வடக்கு பகுதி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது. இருப்பினும் நேற்று தொடர்ந்து அடைமழை பெய்ததால் மேலும் தண்ணீர் அளவு குறைய வாய்ப்பில்லை என தெரிகிறது.

No comments:

Post a Comment