இந்துக்களின் புனித நகராகக் கருதப்படும் வாரணாசியில் குண்டு வெடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த குண்டு வெடிப்பில் 7 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் 4 பேர் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால் குறைந்தது 20 பேருக்கும் அதிகமானோர் காயமுற்றிருக்கக் கூடும் என்றும் அவர்களில் வெளிநாட்டவரும் அடக்கம் என்றும் இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
கங்கை நதிக்கரையோரம் தஷாஸ்வமேத் பகுதியில் மாலை 6.30 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றதாக அரசுத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வாரணாசி குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், குண்டு வெடிப்புத் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உள்துறை அமைச்சகத்தை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Source:.inneram
No comments:
Post a Comment