Islamic Widget

November 08, 2010

கடலூரில் சூறாவளி காற்றுடன் கனமழை: மரங்கள் முறிந்தன; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடலூர்:கடலூரில் நேற்று காலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது."ஜல்' புயல் காரணமாக, கடலூர் துறைமுகத்தில் நேற்று முன்தினம் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல், கடலில் சீற்றம்அதிகரித்தது. கடலூர், தாழங்குடா, சிங்காரத்தோப்பு, பரங்கிப்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை

 மற்றும் கிள்ளை பகுதியில் முடசல் ஓடை, முழுக்குத்துறை, பட்டரையடி, மீனவர் காலனி உட்பட பல பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால், கடலோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.நேற்று அதிகாலை 4 மணி முதல், மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யத் துவங்கியது. காலை 7 மணி முதல் மழை தீவிரமடைந்து 9 மணிக்கு சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பகல் 12 மணிக்கு புயல் கடலூரை கடந்ததால், மழையின் தீவிரம் குறைந்தது.

கடலூர் - சிதம்பரம் சாலையில் மூன்று இடங்களிலும், கடலூர் - திருவந்திபுரம் சாலையில் கே.என்.பேட்டை மற்றும் நெல்லிக்குப்பத்திலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.இதனால், சிதம்பரம், விருத்தாசலம் மற்றும் திருவந்திபுரம் சாலைகளில் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதேபோன்று பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.சூறாவளி காரணமாக கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் கடலோரப் பகுதிகளில், காலை 11 மணிக்கு மின் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.சிதம்பரம், காட்டுமன்னார் கோவிலில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது. சிதம்பரம் பஸ் நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. நீர் நிலைகள் நிரம்பி, வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வேகமாக ஓடியது.மாவட்டம் முழுவதும் மீனவர்கள் மூன்றாவது நாளாக நேற்றும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக, கடலூரில் இருந்து சென்னை, திருச்சி, சேலம், மதுரை, சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, விழுப்புரம், புதுச்சேரி போன்ற முக்கிய நகரங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன; கிராமப் பகுதி பஸ்கள் பெருமளவில் இயங்கவில்லை.
சுவர் இடிந்து 3 @பர் காயம்: புவனகிரி அருகே நத்தமேடு கிராமத்தில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து, கலைவாணன் மனைவி உஷா(27) பலத்த காயமடைந்தார்.நெல்லிக்குப்பம் ஜீவா நகரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் (25) வீட்டில் நேற்று மாலை மண் சுவர் மழையில் நனைந்து விழுந்தது. இதில் சிக்கிய ஹேமச் சந்திரன், இவரது மனைவி குணவதி (23) ஆகியோர் மீட்கப்பட்டு கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விழுப்புரம்: மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் மழையில் 396 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.செஞ்சி 49 மி.மீ., திண்டிவனம் 67, விழுப்புரம் 62, திருக்கோவிலூர் 30, கள்ளக்குறிச்சி 15, சங்கராபுரம் 13, உளுந்தூர்பேட்டை 18, மரக்காணம் 64 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வானூரில் 78 மி.மீ., மழை பதிவாகியது. மாவட்டத்தில் மொத்தம் 396 மி.மீ., மழை பதிவானது. சராசரியாக 43.2 மி.மீ., பதிவாகியது.

Source: Dinamalar  photos pno.news

No comments:

Post a Comment