Islamic Widget

October 20, 2010

கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு:14 பஸ் கண்ணாடிகள் உடைப்பு

கடலூர் : என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக, எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய, "பந்த்' காரணமாக, கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின. என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கடந்த மாதம் 19ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 10 முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தலின் பேரில், உதவி தொழிலாளர் கமிஷனர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.


இந்நிலையில், தொழிலா ளர்களுக்கு ஆதரவாக, அ.தி. மு.க., - பா.ம.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., - கம்யூ., கட்சிகள், கடலூர் மாவட்டத்தில் ஒரு நாள், "பந்த்' அறிவித்தன. அனைத்து தொழிற்சங்கங்கள் (தொ.மு.ச., நீங்கலாக) ஆதரவு தெரிவித்தன. எதிர்க்கட்சிகள், "பந்த்'தை முறியடிக்க, அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. கடலூர் மாவட்டத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி., ரமேஷ் குடவாலா மேற்பார்வையில், ஆறு மாவட்ட எஸ்.பி.,க்கள், 2,800 போலீசார், பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. அரசு பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின. சில தனியார் பஸ்கள், காலையில் இயக்கப்பட்டன.கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து, தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து குறைவால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
பஸ் கண்ணாடிகள் உடைப்பு: அரசு மற்றும் தனியார் பஸ்கள் மீது கல்வீசி தாக்கியதில், 14 பஸ்கள் சேதமடைந்தன. ஐந்து பேர் படுகாயமடைந்தனர். நேற்று காலை மோட்டார் øகிள் நம்பர் பிளேட்டை மறைத்து முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு வந்த மர்ம நபர்கள், மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர். இதில், 14 பஸ்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கோண்டூர் அருகே நடந்த சம்பவத்தில் நெல்லிக்குப்பம் எழுமேடு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி புனிதா(25) இவரது 2 வயது குழந்தை முரளிதரன் (7) காயமடைந்தனர். இருவரும், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் தனியார் பஸ் டிரைவர், அதில் பயணம் செய்த பயணிகள் இருவர் என, மொத்தம் ஐந்து பேர் காயமடைந்தனர்.
பெரும்பாலான இடங்களில் டீ கடை மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெளி மாவட்ட போலீசார், உணவு கிடைக்காமல் அவதியடைந்தனர். நெல்லிக்குப்பத்தில் பதட்டம்: நெல்லிக்குப்பத்தில் கடைகளை திறக்கும்படி தி.மு.க., வினர் கோரிக்கை விடுத்தனர். அதையும் மீறி அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.,வினர், "தீபாவளி வரை கடை விடுமுறை' என, நோட்டீஸ் அச்சடித்து மூடியிருந்த அனைத்து கடை ஷட்டர்களிலும் ஒட்டினர். இதை பார்த்து பயந்த ஒரு சில வியாபாரிகள் மட்டும் கடையை திறந்தனர். இதனால், நெல்லிக்குப்பத்தில் பதட்டம் நிலவியது.

ஐ.ஜி.,பேட்டி: கடலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த பந்த்தையொட்டி வடக்கு மண்ட ஐ.ஜி., ரமேஷ் குடவாலா முகாமிட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பார்வையிட்டார். சிதம்பரத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "பந்த்' போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை. பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்டத்தில் மூன்று இடங்களில் மட்டும் பஸ் மீது கல்வீசிய சம்பவங்கள் நடந்தது. மற்றபடி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லை. 60 சதவீதத்திற்கும் மேல் கடைகள் திறந்திருந்தது' என்றார்.
"பந்த்' முறியடிப்பு: அமைச்சர் நன்றி : கடலூர் மாவட்டத்தில் எதிர் கட்சிகள் நடத்திய "பந்த்'த்தை முறியடிக்க ஒத்துழைப்பு வழங்கிய வணிகர்களுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: என்.எல்.சி., பிரச்னையில் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்கட்சிகள் "பந்த்' அறிவித்திருந்தனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்காமல் முறியடித்து முழு ஒத்துழைப்பு வழங்கிய கடலூர் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு பஸ் ஊழியர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், லாரி, ஆட்டோ, வேன் உரிமையாளர்களுக்கு நன்றி. மேலும் "பந்த்' தை முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் சிறப்பான பாதுகாப்பு அளித்த காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்

Source:  Dinamalar

No comments:

Post a Comment