நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 2490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் இருந்து 1170 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
முதல் அனல்மின் நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அங்கு புதியதாக தலா 250 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 யூனிட்டுகள் அமைக்கப்பட்டு வந்தன. அதில் முதல் யூனிட்டு வேலைகள் முற்றிலும் முடிவடைந்து விட்டது.
3 நாட்களுக்கு முன்பு இதன் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 150 மெகாவாட் தற்போது உற்பத்தியாகி வருகிறது. இது 250 மெகாவாட்டாக உயர்ந்ததும் முறைப்படி மின் உற்பத்தி முழுமையாக தொடங்கப்படும்.
இந்தயூனிட்டை பெல் நிறுவனம் கட்டிக் கொடுத்துள்ளது. 250 மெகா வாட் மின் உற்பத்தி இலக்கை அடைந்ததும் பெல் நிறுவனம் அதை என்.எல்.சி.க்கு ஒப்படைக்கும். ஒரு மாதத்திற்குள் 250 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டிவிடும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2-வது யூனிட்கட்டுமான பணிகளும் முடிவடைந்து விட்டன. ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் இது உற்பத்தியை தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இரண்டிலும் சேர்த்து உற்பத்தி செய்யப்படும் 500 மெகாவாட்டில் தமிழ் நாட்டின் பங்காக 240 மெகாவாட் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு கடுமையாக இருக்கும் இந்த நேரத்தில் என்.எல்.சி. வழங்கும் கூடுதல் மின்சாரம் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓரளவு உதவியாக இருக்கும். முதல் அனல்மின் நிலையம் 40 வருடம் பழமையானது என்பதால் அதை முற்றிலும் இடித்து விட்டு தலா 500 மெகாவாட் கொண்ட 2 அனல் மின் நிலையம் கட்ட திட்டமிட்டுள்ளனர். இந்த பணிகள் 2019-ம் ஆண்டு முடிவடையும்.
No comments:
Post a Comment