Islamic Widget

March 08, 2012

சிதம்பரத்தில் லஞ்சம் பெற்ற VAO கைது

தானே புயல் நிவாரணம் வழங்க விவசாயியிடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சிதம்பரத்தை அடுத்த குமராட்சி ஒன்றியம், மேலபருத்திக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆசைதம்பி. இவர் தேமுதிக ஒன்றிய துணைச் செயலராக உள்ளார். இவரது மனைவி தமயந்தி, 8-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக உள்ளார்.
இவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பயிருக்கு ரூ.41 ஆயிரத்து 600 நிவாரணத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
இதை பெறுவதற்கு தனக்கு ரூ.10 ஆயிரம் தருமாறு மேலபருத்திக்குடி கிராம நிர்வாக அலுவலர் வீராசாமி கேட்டுள்ளார். பின்னர் ரூ.9 ஆயிரமாவது தருமாறு கோரியுள்ளார்.
இதையடுத்து ஆசைதம்பி கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் அளித்தார்.
இந்நிலையில் போலீஸார் அறிவுறுத்தலின்படி ஆசைதம்பி, கிராம நிர்வாக அலுவலர் வீராசாமியை சிதம்பரம் காந்தி சிலை அருகே வந்து செவ்வாய்க்கிழமை பணம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார்.
அதன்படி வீராசாமியிடம், ஆசைதம்பி ரூ.9 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மாறுவேடத்திலிருந்த கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீஸார் லஞ்சம் பெற்றதாக வீராசாமியை (55) கைது செய்து, அவரிடமிருந்து ரூ.9 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றினர்.

No comments:

Post a Comment