பரங்கிப்பேட்டை : சாமியார்பேட்டை சுற்றுலா மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சுனாமிக்குப் பிறகு கடலூர் சில்வர் பீச்சுக்கு இணையாக பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டையில் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டது. சிறுவர் பூங்கா, உயர் கோபுர மின் விளக்கு, சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. சாமியார்பேட்டையைச் சுற்றியுள்ள புதுக்குப்பம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, புதுச்சத்திரம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அதிக அளவில் வந்து பொழுதை கழிக்கின்றனர். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
ஆனால், தற்போது சிறுவர் பூங்கா, சுகாதார வளாகம் முறையாக பராமரிப்பு இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்கள் உடைந்து காணப்படுகிறது. சுகாதார வளாகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டு தண்ணீர் வசதி, மின்சார வசதிகள் இன்றி காணப்படுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் நாளுக்கு நாள் கூட்டமும் குறைந்து சுற்றுலா மையம் வெறிச்சோடுகிறது. தற்போது சுகாதார வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது. "குடி'மன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த பக்கம் செல்லவே சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் கடலில் குளித்து விட்டு துணி மாற்ற இடமின்றி மறைவாக மரம் இருக்கும் இடங்களை நோக்கிச் செல்கின்றனர். மக்கள் மகிழ்ச்சியுடன் பொழுது போக்கும் நல்ல நோக்கத்தில் அப்போதைய கலெக்டர் ககன்தீப்சிங் பேடியின் முயற்சியால் கொண்டு வரப்பட்டு தற்போது பாழாகியுள்ள சுற்றுலா மையத்தை மீண்டும் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment