சென்னை: தமிழகத்தில் சென்னை மற்றும் புதுவையில் புதன்கிழமை மாலை முதல் தொடங்கிய கன மழை நள்ளிரவு வரை நீடித்தது. பலத்த இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காற்று மண்டலத்தில் ஏற்பட்டுள்ள வெப்ப சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எழும்பூர், புரசைவாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை முக்கியச் சந்திப்புகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
சில இடங்களில் சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சென்னையை அடுத்த சில புறநகர் பகுதிகளில் மழையின் காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இரண்டாவது கட்ட தென்மேற்குப் பருவக் காற்று தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புதுவையில் லேசானமழை அல்லது கனமழை தொடரும். சென்னையில் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment