Islamic Widget

November 06, 2010

ஜல் புயல் - ஆந்திர கடலோர மாவட்டங்களில மக்கள் வெளியேற்றம்!

சென்னையில் இருந்து 650 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள ஜல் புயல் ஞாயிற்றுக் கிழமையன்று மாலை புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆந்திராவின் 4 மாவட்டங்களில் கடலோரப் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.


ஜல் கரையைக் கடக்கும்போது ஸ்ரீபொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர், பிரகாசம், குண்டூர் மற்றும் சித்தூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு இருக்கக் கூடும் என்பதால் இப்பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் நிவாரணப் படையினரின் ஒரு பகுதி நெல்லூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இராணுவமும் விமானப் படையும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன. மீட்புப் படகுகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கடற்படையிடம் கோரப்பட்டுள்ளது.
ஜல் புயல் மேலும் வலுவடைந்து வருவதோடு, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால் ஞாயிற்றுக் கிழமை மாலை அல்லது இரவில் புதுச்சேரி- ஆந்திராவின் நெல்லூருக்கு இடையே, சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும்.
இதனால் இன்று முதலே வடக்கு தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரங்களில் மிக பலத்த சூறாவளிக் காற்று வீசும். மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகம் வரை சூறைக் காற்று வீசும்.
ஞாயிற்றுக் கிழமை அதிகாலை முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து 120 முதல் 140 கி.மீ. வரை புயல் காற்று வீசும்.
புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர வடக்கு, தெற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவில் மிக பலத்த கன மழை பெய்யும்.
24 மணி நேரத்துக்குப் பின் தமிழகத்தின் சில இடங்களிலும் ராயலசீமா உள்ளிட்ட சில ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் 25 செ.மீ. வரை மிக மிக பலத்த மழை பெய்யவும் வாய்ப்புண்டு.
கடல் மிக மிக கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் தாழ்வான கடலோரப் பகுதிகளில் அலைகள் புகவும் வாய்ப்புண்டு. இப் பகுதிகளி்ல் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Source: inneram

No comments:

Post a Comment