Islamic Widget

November 06, 2010

2014ல் NRIகளுக்கு ஓட்டுரிமை! - தேர்தல் ஆணையர் தகவல்

2014 தேர்தலின் போது வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை சாத்தியப்படலாம் என்று இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர். சலாஹுத்தீன் குரைஷி தெரிவித்துள்ளார்.

ரியாத் மாநகரில், அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 'சர் சையது அஹமது நாள்' நிகழ்ச்சியில் பேசும்போது இத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
500க்கும் மேற்பட்ட அலிகர் பல்கலை. முன்னாள் மாணவர்கள், குடும்பசகிதமாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சவூதி அரேபியாவுக்கான இந்தியத்தூதர் தல்மீஸ் அஹமது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் சயீத் நக்வியும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இவ்வாண்டு தொடக்கத்தில், பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி விழாவொன்றில் பேசுகையில் வெ.நா.இந்தியர்களுக்கான வாக்குரிமை குறித்து உறுதிபூண்டதை குரைஷி மேற்கோள் காட்டினார்.
"வெ.நா. இந்தியர்கள் அடுத்த பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்குண்டான எல்லா சாத்தியக்கூறுகளையும் தேர்தல் ஆணையம் பரிசிலீக்கும்" என்றார் தலைமை ஆணையர். "ஆனால், அது சொல்வதைப் போன்று எளிதான வேலையில்லை. உதாரணமாக, சவூதிஅரேபியா என்கிற ஒருநாட்டில் மட்டுமே இரண்டு மில்லியன் இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை மறக்கக் கூடாது"
"பாதுகாப்புத் துறையினருக்கும், வெளிநாட்டு பணியிலுள்ள அரசுயர் அதிகாரிகளுக்கும் உள்ளது போன்ற மடல்வழிவாக்குரிமை மற்றொரு யோசனை" என்ற குரைஷி "இதுகுறித்த அனைத்து வழிமுறைகளை ஆய்ந்து தகவல் தரும்படி அயலக அமைச்சகத்தை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது", என்பதையும் சொன்ன குரைஷி அயல்துறை அமைச்சகம், வெளிநாட்டுத் தூதரகங்கள், ,மேலும் குறிப்பிடத்தகுந்த வெ.நா.இந்தியர்கள் ஆகியோருடன் தேர்தல் ஆணையத்தின் அணிகள் இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், எல்லாம் கூடிவரும் பட்சத்தில் 2014 தேர்தலில் வெ.நா இந்தியர்கள் வாக்குரிமை அடைவர்" என்றும் தெரிவித்தார்.

Source: inneram

No comments:

Post a Comment