பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தலில் டாக்டர் S. நூர் முஹம்மது போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமையன்று பதவியேற்க இருக்கும் நிலையில், ஜமாஅத் நிர்வாகிகள் யார் என்பதில் தொடங்கிய பரபரப்பு இன்று அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.
பரங்கிப்பேட்டை சின்னக்கடை தெருவை சேர்ந்த J.ஹஸன் அலி என்பவர், டாக்டர் S.நூர் முஹம்மது போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னணி என்ன என்பதை தெரிவிக்கிறேன் என்று நேற்று மாலை வெளியிட்ட பிரசுரம் ஒன்றில் தெரிவித்திருந்தார். அப்பிரசுரம் இன்று ஜும்ஆ தொழுகைக்கு பின்னரும் வினியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பரங்கிப்பேட்டையில் செயல்பட்டு வரும், இஸ்லாமிய அமைப்புகளான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) நிர்வாகிகள் முத்துராஜா, ஃபாஜல் ஹுசேன், இக்பால், சாஹுல், ஹஸன் அலி, அன்சாரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக(TMMK) நிர்வாகிகள் ஜாக்கீர், பிலால், நஜிரான், செய்யது, ஹஸன் அலி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத்(INTJ) நிர்வாகிகள் நஸ்ருத்தீன், கவுஸ் ஹமீது, எஹ்யா மரைக்காயர், ஹாஜா ஆகியோர் இன்றிரவு சுமார் 8.00 மணியளவில் பரங்கிப்பேட்டையில் ஒன்று கூடி, J.ஹஸன் அலி என்பவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் உண்மை நிலை பற்றி பொதுமக்களுக்கும், சமுதாய அமைப்புகளுக்கும் தெரியவில்லை.
பொதுமக்களிடம் குழப்பமான சூழ்நிலை இருப்பதால் ஊரின் பொதுக்குழு கூடி முடிவு செய்யப்பட வேண்டும். எனவே இதன் உண்மை நிலையை அறிந்து தெளிவு ஏற்படும் வரை பதவி பிரமாண நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையாளர் ஆடிட்டர் I.முஹம்மது இல்யாஸை சந்தித்து முறையிட்டனர்.
இதற்கு பதிலளித்த முஹம்மது இல்யாஸ், “தேர்தல் முடிவடைந்து சான்றிதழ் வழங்கியதோடு தங்களது கடமை முடிவடைந்து விட்டது. தற்போதைய ஜமாஅத் நிர்வாகம் தான் பதவியேற்பிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று ஜமாஅத் அமைப்பு நிர்ணயச் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதால், தற்போதைய ஜமாஅத் நிர்வாகத்தை அணுகலாம் என்றார்.
பின்னர் மீராப்பள்ளியில் நடைபெற்ற சிறிது நேர ஆலோசனைக்கு பின்னர் தற்போதைய ஜமாஅத் தலைவர் (பொறுப்பு) I.இஸ்ஹாக் மரைக்காயரை இம்மூன்று அமைப்பினரும் சந்தித்து கேட்டனர். இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது உண்மை தான், ஆனால் எங்களின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரே நாள் தான் இருப்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றார்.
பின்னர் மீண்டும் மீராப்பள்ளியில் கூடி ஆலோசனை செய்த இம்மூன்று அமைப்பினரும், சனிக்கிழமை (11-02-2012) அன்று பரங்கிப்பேட்டையில் தங்கள் அமைப்புகளால் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்ற போதிலும், பொது அமைதியினை கருத்தில் கொண்டு அம்முடிவை கைவிடுவதாகவும், ஆனால் பொதுமக்களிடம் அதிக அளவில் கையெழுத்துகள் பெற்று ஜமாஅத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கும் மீராப்பள்ளி நிர்வாகி M.O.ஜமால் முஹம்மது வசம் பொதுமக்களின் கையெழுத்து அடங்கிய மனு வழங்கப்படும் என்று முடிவு செய்துள்ளனர்.
ஜமாஅத் தலைவர் பதவியேற்பிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமுதாய அமைப்புகள், J.ஹஸன் அலி வெளியிட்டுள்ள பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து உண்மை நிலை தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி இருப்பது பரங்கிப்பேட்டையில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment